Published : 17 Feb 2024 05:21 PM
Last Updated : 17 Feb 2024 05:21 PM
ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்துது. நேற்று இந்திய அணி 445 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இறங்கியது. பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அதிரடியான தொடக்கம் கொடுத்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஸாக் கிராவ்லி 28 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 13.1 ஓவரில் 89 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆலி போப் களமிறங்க இந்திய சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் தொடுத்தார் பென் டக்கெட். ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களுடன் மட்டையை சுழற்றிய பென் டக்கெட் 88 பந்துகளில், ஒரு சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
சர்வதேச டெஸ்டில் இது அவரது 3-வது சதமாக அமைந்தது. மறுமுனையில் சீராக ரன்கள் சேர்த்து வந்த ஆலி போப் 55 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.2-வது விக்கெட்டுக்கு பென் டக்கெட்டுடன் இணைந்து 93 ரன்கள் சேர்த்தார் ஆலி போப். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.
பென் டக்கெட் 118 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 133 ரன்களும் ஜோ ரூட் 9 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய நான்காவது ஓவரிலேயே 18 ரன்கள் எடுத்திருந்த ரூட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். வந்த வேகத்தில் பேர்ஸ்டோவ் டக் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியை தொடர்ந்து பென் டக்கெட் 153 ரன்களுக்கு விக்கெட்டானர். பென் டக்கெட்டை வீழ்த்திய குல்தீப் யாதவ், போக்ஸ் செட்டில் ஆக விடாமல் விக்கெட்டாக்கி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கொஞ்சம் தடவினார், பின்னர் கொஞ்சம் அடித்தார். ஆனால் கடைசியில் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் டர்ன் ஆகாத பந்தை லாங் ஆனில் அடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். தூக்கி எறியப்பட்ட விக்கெட்டுகள் இதெல்லாம். காரணம் ஜோ ரூட் தேவையில்லாமல் அபத்தமாக அவுட் ஆனதுதான். பென் போக்ஸ் பொதுவாக நிதானமாக ஆடுவார்.
ஆனால் இன்று அவரும் சிராஜின் சாதாரண பந்துக்கு ரோகித் சர்மாவிடம் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து மென்மையாக ஆட்டமிழந்தார். ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சனை சிராஜ் யார்க்கரில் பவுல்டு எடுக்க ஹார்ட்லியை காலி செய்தார் ஜடேஜா. இறுதியில் மார்க் உட் 4 நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இந்திய தரப்பில் சிராஜ் 4 விக்கெட், ஜடேஜா, குல்தீப் தலா 2 விக்கெட், அஸ்வின், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் இணைந்த ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் இணை நிதானமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 25வது ஓவருக்கு மேல் இக்கூட்டணி மட்டையை சுழற்ற ஆரம்பித்தது. களத்தில் செட்டில் ஆன தெம்பில் இருவரும் பவுண்டரிகளை விரட்டி ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 104 ரன்கள் எடுத்திருந்த காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ரஜத் படிதார் 10 பந்துகளை சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் விக்கெட்டானர். மறுமுனையில் கில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கில் 65 ரன்கள், குல்தீப் யாதவ் 3 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT