Published : 16 Feb 2024 04:09 PM
Last Updated : 16 Feb 2024 04:09 PM

பிசிசிஐ உத்தரவை மீறிய இஷான் கிஷன் - ஒப்பந்தம் ரத்தாகும் அபாயமா?

இஷான் கிஷனுக்கும் பிசிசிஐ-க்கும் இடையே என்னவிதமான கருத்து மோதல் என்பது வெளிப்படையாக இதுவரை வெளியிடப்படவில்லை. இப்பொதெல்லாம் பிரஸ் மீட் என்றால் என்னவென்று கேட்காத குறைதான் பிசிசிஐ நிர்வாகமும், அணித் தேர்வுக் குழுவும். ஏனென்றால் பத்திரிகைகளிடம் எதையும் இவர்கள் தெரிவிப்பதில்லை. அதனால்தான் பத்திரிகைகள் சாதாரண கிரிக்கெட் அணித் தேர்வு குறித்த தகவல்களை கூட ஏதோ புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் நிலைக்குச் சென்று விட்டன.

ஜார்க்கண்ட் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் விக்கெட் கீப்பர் - பேட்டர் இஷான் கிஷன் வெள்ளிக்கிழமை தொடங்கிய இறுதிச் சுற்று ஆட்டங்களைத் தவிர்த்துவிட்டதால், ரஞ்சி டிராபியை இஷான் கிஷன் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இஷான் கிஷன், தீபக் சஹார், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரை பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதில் ஸ்ரேயஸ் அய்யர் முதுகு வலி காரணமாக ஆடமுடியவில்லை என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகிய நிலையில், ஏன் தீபக் சஹார், இஷான் கிஷன் ஆடவில்லை என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது.

வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டைத் தவிர்ப்பது குறித்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா சமீபத்தில் கூறிய போது, “உடல் தகுதி உடையவர்கள் நிச்சயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடத்தான் வேண்டும். இது மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும்.

வீரர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தேர்வு செய்யமுடியாது. அணித் தேர்வாளர்கள்தான் முடிவெடுப்பார்கள். சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் நன்றாக ஆடுபவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடித்தான் ஆக வேண்டும்” என்று எச்சரிக்கைத் தொனியில் குறிப்பிட்டிருந்தார்.

ஜார்க்கண்ட் அணிக்கு ஆடும் இஷான் கிஷன் தொடர்ந்து போட்டிகளைப் புறக்கணிப்பதால் அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பணிகளை குமார் குஷக்ரா செய்து வருகிறார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது பாதியில் இஷான் கிஷன் தனக்கு பிரேக் வேண்டும் என்று கேட்டார். சரி என்று விடுவிக்கப்பட்ட நிலையில் துபாய் சென்று ஜாலியாக இருந்ததாக செய்திகள் கசிந்தன. இதனையடுத்து அணி நிர்வாகத்திற்கும் இஷான் கிஷனுக்கும் உரசல்கள் ஏற்பட்டன.

மேலும் பிசிசிஐ-யின் உத்தரவை மீறி ரஞ்சி போட்டிகளில் ஆடாமல் இஷான் கிஷன் பரோடாவில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். இதுவும் இந்திய அணி நிர்வாகம், கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் திராவிட் மத்தியில் நல்ல அபிப்ராயங்களை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து காட்டிய பிடிவாதத்தினால், இஷான் கிஷன் பிசிசிஐ மைய ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்படலாம் என்று செய்திகள் எழுந்துள்ளன.

மேலும் குறைந்தது 3-4 ரஞ்சி போட்டிகளில் ஆடியிருந்தால்தான் ஐபிஎல் விளையாட தகுதி பெற முடியும் என்ற புதிய விதிமுறையையும் கொண்டு வரலாமா என்று பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x