Published : 15 Feb 2024 04:50 PM
Last Updated : 15 Feb 2024 04:50 PM
“நீண்ட நெடும் போராட்டத்துக்குப் பிறகு மும்பை வீரர் சர்பராஸ் கான் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்திய லெவனில் அறிமுகமாகியுள்ளார். ஆனால், அவரை இறக்குவதற்குப் பதிலாக ஜடேஜாவை இறக்கியது இந்திய அணிக்கு பெரிய பலன்களை அளித்தாலும் நானாக இருந்தால் சர்பராஸ் கானைத்தான் களமிறக்கியிருப்பேன்” என்று வர்ணனையில் தெரிவித்தார் தினேஷ் கார்த்திக்.
சர்பராஸ் கான் போல் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெலுக்கும் இன்று அறிமுகம். சர்பராஸ் கான் 311 வது டெஸ்ட் வீரராக அறிமுகமானார், அனில் கும்ப்ளே இவருக்கு இந்தியத் தொப்பியை வழங்கினார். தினேஷ் கார்த்திக் ஜுரெலுக்கு தொப்பியை வழங்கினார்.
தொப்பியை சர்பாரஸ் கானிடம் வழங்கிய அனில் கும்ப்ளே கூறும்போது, “சர்பராஸ் உன்னை நினைத்து பெருமை அடைகிறேன். நீ வந்த வழியை நினைத்துப் பெருமை அடைகிறேன். உன் குடும்பத்தினரும் உன் தந்தையும் நீ சாதித்ததை நினைத்துப் பெருமை அடைவார்கள். நீ கடினமாக உழைத்தாய் என்பதை நான் அறிவேன். சில பல ஏமாற்றங்கள் இருக்கவே செய்தன. ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் நீ குவித்த ரன்கள்... வெல் டன் சர்பராஸ். நிச்சயம் உனக்கு இன்றைய தினம் நல்ல நினைவுகளை வழங்கும் என்று கருதுகிறேன். உன் நீண்ட கெரியரின் துவக்க நாள் இது. உனக்கு முன்னால் 310 வீரர்களே ஆடியுள்ளனர். இது உன்னுடைய டர்ன். குட் லக் சர்பராஸ்” என்று நெகிழ்ச்சியுடன் அகமகிழ கூறினார் கும்ப்ளே.
அதே போல் ஜூரெலுக்கு தொப்பியை வழங்கிய தினேஷ் கார்த்திக் கூறும்போது, “ஆக்ராவிலிருந்து வந்து நொய்டாவுக்கு இளம் வயதில் குடிபெயர்ந்து நீ எதிர்கொண்ட கஷ்டங்களில் உன் தாயும் உன்னுடன் இணைந்திருந்தார். நிறைய பேர் உன்னுடைய இந்தப் பயணத்தில் பங்காற்றியிருப்பார்கள். அவர்கள் அனைவரும் இன்று உன்னை டெஸ்ட் அணியில் காண்பார்கள்.
நீ நிறைய வண்ண உடைகளில் ஆடியிருக்கலாம். குறிப்பாக நீல நிற உடையில் ஆடியிருக்கலாம். ஆனால் வெள்ளை ஆடை என்பது தூய்மையின் குறியீடு. இந்தியாவுக்கு ஆடுவது என்பது அதனினும் பெரிது. டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. கடும் சோதனைகளைத் தருவது, எனவே இதில் வெற்றி பெற்றுவிட்டால் பெரிய திருப்தி ஏற்படும்.
உன்னுடைய பெரிய ஹீரோவான உன் தந்தை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிச்சயம் பெருமையாக இருக்கும். ரிங்கு சிங் உனது ரூம் மேட். உனது ஹவுஸ் மேட் என்பதும் தெரியும். ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பிரமாதப்படுத்தி வருகிறார். எனவே அவரது ரூம் மேட் ஆன நீயும் அணிக்காக சிறப்பானவற்றை செய்வாய்.
டெஸ்ட் பார்மெட்டில் அதிகம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் நுழைந்ததில்லை. சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு 65 வீரர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் வந்துள்ளனர். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 56 புதிய வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் வந்துள்ளனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 வீரர்கள்தான் புதிதாக வந்துள்ளனர். எனவே இது கடினமான வடிவம் அதில் நீ தேர்வாகியுள்ளாய். எனவே நீ சாதித்தது சிறப்பு வாய்ந்தது. நீண்ட காலம் ஆட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT