Published : 14 Feb 2024 05:36 PM
Last Updated : 14 Feb 2024 05:36 PM

இஷான் கிஷன் விவகாரம்: புதிய விதியை அமல்படுத்த பிசிசிஐ ஆலோசனை

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு மூன்று முதல் நான்கு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுவதை கட்டாயமாக்க என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

இதற்கு காரணமாக அந்த அதிகாரி கூறும்போது, "சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பவில்லை. ஷார்ட் பார்மெட் கிரிக்கெட் போட்டிகளை விளையாட மட்டுமே ஆசைப்படுகிறார்கள் என்பதை பிசிசிஐ தலைமை நன்கு அறியும். டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஐபிஎல்லில் விளையாடுவதில் ஆர்வம் காண்பிப்பதால் இத்தகைய முடிவை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

பிசிசிஐ முடிவின் பின்னணி: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் விலகினார். மனச்சோர்வு ஏற்பட்டதால் குடும்பத்துடன் நேரம் செலவிட விருப்பம் தெரிவித்து தொடரில் இருந்து பாதியில் விலகினார். அதன்பின் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் தேர்வாகவில்லை. இஷான் கிஷன் தேர்வு செய்யாததற்கு அவரின் நன்னடத்தை காரணம் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இதனை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் மறுத்ததுடன், இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படும் முன்பு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார். இதனிடையே, திராவிட்டின் கூற்றுக்கு மாறாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னல் பாண்டியா உடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து அதற்கு தயாராகும் பொருட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் இஷான் கிஷன். ரஞ்சி கோப்பை தொடரில் தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட் அணிக்கு விளையாடாமல், திராவிட்டின் அறிவுரைக்கு மாறாக பாண்டியா சகோதரர்களுடன் இஷான் கிஷன் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பிரச்சினைக்கு வித்திட்டது. இதையடுத்தே பிசிசிஐ இந்த முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா விவகாரம்: காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக் பாண்டியாவும் ரஞ்சி போட்டிகளில் விளையாடாமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், இதுநாள் வரை ஹர்திக் பாண்டியாவை ரஞ்சி போட்டிகளில் விளையாட பிசிசிஐ கட்டாயப்படுத்தியதில்லை. இஷான் கிஷன் விவாகரத்துக்கு பின் ஹர்திக் குறித்து பிசிசிஐ நிலைப்பாடு கேள்விக்குள்ளானது.

இதனிடையே, இது தொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி, "ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை அவரின் உடல்நிலையால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பணிச்சுமையை தாங்க முடியாது. இது பிசிசிஐக்கு நன்கு தெரியும். இதனால், ஐசிசி நடத்தும் ஷார்ட் பார்மெட் போட்டிகளுக்கு இந்திய அணிக்கு தேவைப்படுவார் என்பதால் அவர் ரஞ்சியில் விளையாடுவதை பெரிதுபடுத்துவதில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x