Published : 14 Feb 2024 06:44 AM
Last Updated : 14 Feb 2024 06:44 AM

AUS vs WI கடைசி டி20 போட்டி | ஆந்த்ரே ரஸ்ஸல் விளாசலில் மே.இ.தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி

பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு ஆகியோரது அதிரடியால் 37 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 8.4 ஓவர்களில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஜான்சன் சார்லஸ் 4, கைல் மேயர்ஸ் 11, நிக்கோலஸ் பூரன் 1, ராஸ்டன் சேஸ் 37, கேப்டன் ரோவ்மன் பவல் 21 ரன்களில் நடையை கட்டினர்.

இதன் பின்னர் 6-வது விக்கெட்டுக்கு ஷெர்பேன் ரூதர்ஃபோர்டுடன் இணைந்த ஆந்த்ரே ரஸ்ஸல் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தார். தனது 3-வது அரை சதத்தை விளாசிய ஆந்த்ரே ரஸ்ஸல் 29 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் விளாசிய நிலையில் ஸ்பென்சர் ஜான்சன் பந்தில்ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு 40 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோமரியோ ஷெப்பர்டு 2 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட்களை வீழ்த்தினார். 221 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 81 ரன்களும் டிம் டேவிட் 19 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் விளாசினர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 17, ஆரோன்ஹார்டி 16, ஜோஷ் இங்லிஷ் 1, கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களில் நடையை கட்டினர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ரோமரியோ ஷெப்பர்டு, ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆறுதல் வெற்றியுடன் டி 20 தொடரை நிறைவு செய்தது. முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டிருந்தது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x