Published : 13 Feb 2024 02:54 PM
Last Updated : 13 Feb 2024 02:54 PM

ராஜ்கோட் டெஸ்ட் | அக்சர் படேல் vs குல்தீப் யாதவ் - செலக்‌ஷனில் யாருக்கு அதிக வாய்ப்பு?

ராஜ்கோட்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தியதற்கு பிரதான காரணம் பும்ரா எனில் மற்றொரு காரணம் குல்தீப் யாதவ் என்றால் மிகையாகாது. எனவே, ராஜ்கோட்டில் நாளை மறுநாள் (பிப்.15) தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஜடேஜா உடல் தகுதிப் பெற்று விட்டால் குல்தீப் யாதவை தக்க வைத்து அக்சர் படேலை நீக்குவதா அல்லது குல்தீப்பை நீக்குவதா என்ற செலக்‌ஷன் தர்ம சங்கடம் இந்திய அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

குல்தீப் யாதவ் அணிக்கு முக்கியமாக தேவை. ஏனென்றால் அவர் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களிலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் அச்சுறுத்தல் வகை பவுலர் ஆவார். விசாகப்பட்டினம் பிட்ச் பேட்டருக்குச் சாதகமான ஆடுகளம். அதில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் குல்தீப். மேலும் அந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரை விட சிக்கனமாகவும் வீசினார்.

குல்தீப் இடது கை லெக் ஸ்பின்னர் அதுவும் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் எந்தப் பிட்சிலும் இவர் பந்துகளில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருப்பது இயல்பே. இதனால் இங்கிலாந்தின் ஸ்பின்னுக்கு எதிரான உத்தியான ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப் போன்ற ஷாட்களை ஆடுவது கடினம். மேலும் குல்தீப் யாதவ் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசி இங்கிலாந்து பேட்டர்களின் அதிரடி ஸ்வீப்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். இவரை ஸ்வீப் ஆடப்போய் பந்து மட்டையில் சிக்கவில்லை எனில் பவுல்டு எல்.பி. ஆக வாய்ப்புகள் அதிகம். அதனால் இங்கிலாந்து பேட்டர்கள் இவரிடம் ரிஸ்க் எடுக்க பயப்படுகின்றனர்.

மாறாக அக்சர் படேலின் ஆக்‌ஷன் நாளுக்கு நாள் சர்வதேசத் தரத்திலிருந்து சரிந்து வருகிறது. அவர் தன் இடது கையை பந்து வீசும் போது முழு ஆக்‌ஷனில் கொண்டு வருவதில்லை. அப்படியே மேலேயிருந்து விடுகிறார். மேலும் கை அவரது காதோரம் வந்து பந்து பிளைட் செய்யப்படுவதில்லை. கையை உடலிலிருந்து தள்ளி வைத்து ரிலீஸ் செய்கிறார். இது பயனளிக்காமல் போகிறது. இவரது பந்துகளில் ஒரு நிச்சயமின்மை இல்லை. கணித்து விடக்கூடியதாகத்தான் வருகிறது.

இவர் டிபிகல் குழிப்பிட்ச் பவுலர், பிட்ச்சில் பந்துகள் தாழ்வாக வந்தால் இவரது ‘வைடு ரிலீஸ்’ பந்துகள் திரும்பாமல் சறுக்கிக் கொண்டு நேராக வரும் போது இங்கிலாந்துக்கு அச்சுறுத்தல் அவ்வளவே. ஆனால் அதற்காக இவருக்காக பிட்ச் போட முடியுமா? ஏற்கெனவே அஸ்வினுக்காகவும் ஜடேஜாவுக்காகவும் பிட்ச் போட்டு இப்போது விக்கெட்டுகளை எடுக்க மட்டுமல்ல, சாதாரண பிட்சில் அஸ்வினினால், ஜடேஜாவால் பந்துகளை திருப்ப முடியவில்லை.

இந்நிலையில் ஜடேஜா அணிக்குள் வந்தால் பேட்டிங்குக்காக அக்சர் படேலை வைத்துக் கொள்வதைப் போல முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. மேலும் குல்தீப் யாதவ் எப்போதெல்லாம் விக்கெட்டுகள் எடுக்கிறாரோ அதற்கு அடுத்த போட்டியில் அவர் ஆட முடியாமல் போய் வருவதும் தொடர் நிகழ்வாக அவருக்கு வெறுப்பூட்டும் விதமாக நடைபெற்று வருகிறது.

புள்ளி விவரங்கள் கூறுவதென்ன? - 2023 தொடங்கி 11 டெஸ்ட் போட்டிகளில் அக்சர் படேல் 8 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். சராசரி 49 என்கிறது ஈஎஸ்பின் கிரிக் இன்போ புள்ளி விவரம். சுமார் 100 பந்துகளுக்கு ஒரு விக்கெட்டைத்தான் அவர் சராசரியாக எடுப்பதாகவும் அதே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆனால் பேட்டிங்கில் 56.71 என்ற சராசரி வைத்துள்ளார்.

ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் பவுலிங்கும் வீசுவார் என்ற போர்வையில் அவரை அணிக்குள் வைத்திருந்தால் அவர் பேட்டிங் ஆர்டரை மேலே கொண்டு செல்ல வேண்டும். 4வது ஸ்பின்னராக பார்ட் டைம் ஸ்பின்னராக அவர் அணியில் இருக்கலாம். அப்போது பேட்டர் யாராவது ஒருவரை கழற்றி விட வேண்டி வரும். இப்போது ஸ்ரேயஸ் ஐயர் இல்லாததால் அக்சர் படேலை அணியில் வைத்துக் கொள்ளவும் ராகுல் திராவிட்-ரோஹித் கூட்டணி முடிவு செய்து சர்பராஸ் கானின் வரவை மேலும் ஒத்திப்போட முடிவெடுத்தாலும் முடிவெடுக்கும்.

ராஜ்கோட் பிட்ச் ஒன்று கடுமையான பேட்டிங் பிட்ச் ஆக இருக்கும். இல்லையெனில் கடுமையான ஸ்பின் பிட்ச் ஆக இருக்கும். இந்த இரண்டு தீவிர நிலைக்கு நடுவே ஒரு பிட்ச் அமைவது கடினம் என்றே தெரிகிறது. பிட்ச் பிளாட் ஆக இருந்தால் குல்தீப் யாதவும் பிட்ச் கடும் திரும்புகையாக இருந்தால் அக்சர் படேலும் அணியில் இருப்பார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x