Published : 10 Feb 2024 02:00 PM
Last Updated : 10 Feb 2024 02:00 PM

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் | கடைசி 3 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு - விராட் கோலி விலகல்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி 3 போட்டியிலும் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி இடம்பெறவில்லை. என்ன காரணத்துக்காக விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்பது தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக என்று மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. தென் ஆப்பிரிக்க முன்னாள் டிவில்லியர்ஸ், "கோலி - அனுஷ்கா தம்பதியினர் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகின்றனர்" என்று தகவல் கூறினார்.

ஆனால், அந்த தகவலை அவரே பின்னாளில் மறுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிளில் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், "விராட் கோலியின் விலகல் முடிவை பிசிசிஐ முழுமையாக மதிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய இந்த 13 வருடங்களில் ஒரு டெஸ்ட் தொடர் முழுவதும் விளையாடாமல் இருப்பது இதுவே முதல் முறை.

ஸ்ரேயஸ் ஐயர் நீக்கம்: இதற்கிடையே, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதாக சோபிக்காத ஸ்ரேயஸ் ஐயர் முதுகுவலி காரணமாக கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இரண்டாவது டெஸ்டில் ஓய்வில் இருந்த முகமது சிராஜ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரம், பிஹாரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் திறமையை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் தற்போது ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி, இரண்டாவது டெஸ்டில் அணியில் இடம்பிடித்திருந்த ரஜத் படிதர் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர்.

காயம் காரணமாக விசாகப்பட்டினம் டெஸ்டில் விளையாடாத கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மருத்துவர்களின் உடற்தகுதி அனுமதிக்கு ஏற்ப விளையாடுவர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப். இவர்கள் தவிர, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x