Published : 28 Aug 2014 12:00 AM
Last Updated : 28 Aug 2014 12:00 AM

ரோஜர் ஃபெடரர் 50; பெல்லிஸ் சாதனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது முதல் சுற்றில் வெற்றி கண்டதன் மூலம் இந்த ஆண்டில் 50-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மரின்கோ மெட்டோசேவிச்சை தோற்கடித்தார். இந்தப் போட்டியோடு சேர்த்து நியூயார்க்கில் இரவு நேரத்தில் விளையாடிய 24 போட்டிகளில் 23-ல் வெற்றி கண்டுள்ளார் ஃபெடரர்.

ஃபெடரர் தனது அடுத்த சுற்றில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான சாம் குரோத்தை சந்திக்கவுள்ளார். வெற்றி குறித்துப் பேசிய ஃபெடரர், “போட்டி 3-வது செட்டுக்கு சென்றபோது நான் எதிர்பார்த்ததைவிட கடினமாக இருந்தது. மரின்கோ கடும் சவால் அளித்தார்” என்றார்.

மரின்கோவுக்கு எதிராக ஃபெடரர் 10 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். அவருடைய ஆட்டத்தை கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டான் நேரில் கண்டுகளித்தார்.

60-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் ரோஜர் ஃபெடரர் இந்த முறை சாம்பியனாகும் பட்சத்தில் கடந்த 40 ஆண்டுகளில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

லூகாஸ் தோல்வி

குரேஷியாவைச் சேர்ந்த 17 வயது வீரர் போர்னா கோரிக் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 29-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் லூகாஸ் ரோசலுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விம்பிள்டன் போட்டியில் ரஃபேல் நடாலுக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ரோசல், இப்போது தரவரிசையில் 202-வது இடத்தில் இருக்கும் கோரிக்கிடம் சரணடைந்துள்ளார்.

கோரிக் தனது 2-வது சுற்றில் விக்டர் எஸ்ட்ரெல்லா பர்கோஸை சந்திக்கிறார். 34-வது வயதில் அமெரிக்க ஓபனில் அறிமுகமாகியிருக்கும் இவர், இந்தப் போட்டியில் பங்கேற்ற முதல் டொமினிக் குடியரசு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் உள்ளிட்டோர் தங்களின் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

செரீனா வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான டெய்லர் டௌன்சென்டை 55 நிமிடங்களில் தோற்கடித்தார். செரீனா தனது 2-வது சுற்றில் சகநாட்டவரான வானியா கிங்கை சந்திக்கிறார்.

ஃபெடரரைப் போலவே 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கும் செரீனா, இந்த ஆண்டில் எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் பட்டம் வெல்லவில்லை. ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் அவர் 4-வது சுற்றை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரா விட்டோவா வெற்றி

செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கிறிஸ்டினா மேடினோவிக்கையும், போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் யூஜீனி புச்சார்டு 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பெலாரஸின் ஓல்கா கோவர்ட்சோவாவையும் தோற்கடித்தனர்.

முன்னாள் முதல் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவையும், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் லாரன் டேவிஸையும் வீழ்த்தினர்.

முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-3, 2-6, 6-7 (3) என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் மேரினா எரகோவிக்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-7 (3), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மிசாக்கி டோயை தோற்கடித்தார்.

போபண்ணா ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடி தங்களின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஜோடி 6-7 (10), 6-4, 6-7 (5) என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசைக்குள் இல்லாத இத்தாலியின் டேனிலே பிரேச்சியாலி-ஆன்ட்ரியாஸ் செப்பி ஜோடியிடம் தோல்வி கண்டது.

சிபுல்கோவாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த பெல்லிஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயது வீராங்கனையான சிசி பெல்லிஸ் தனது முதல் சுற்றில் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருந்த ஸ்லோவேகியாவின் டொமினிகோ சிபுல்கோவாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சிபுல்கோவா, சர்வதேச தரவரிசையில் 1,208-வது இடத்தில் இருக்கும் பெல்லிஸிடம் தோல்வி கண்டிருக்கிறார். இதன்மூலம் அமெரிக்க ஓபன் வரலாற்றில் வெற்றியை ருசித்த இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கிறார் பெல்லிஸ்.

இதற்கு முன்னர் ரஷ்யாவின் அன்ன கோர்னிகோவா அமெரிக்க ஓபனில் வென்ற இளம் வீராங்கனை என்ற சாதனையை வைத்திருந்தார்.தற்போதைய நடப்பு சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் முதல்முறையாக (1999) அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோது பிறந்த பெல்லிஸ், இப்போது அவருடன் விளையாட ஆரம்பித்துவிட்டார். வெற்றி குறித்துப் பேசிய பெல்லிஸ், “இந்தப் போட்டியில் ஆட நுழைந்தபோது, நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் பிரம்மாண்டமான வெற்றியோடு திரும்புவேன் என நினைக்கவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x