Published : 09 Feb 2024 01:59 PM
Last Updated : 09 Feb 2024 01:59 PM
புதுடெல்லி: "ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதிலோ, அல்லாஹு அக்பர் என்று சொல்வதிலோ எந்த தீங்கும் இல்லை. ஏனெனில் இதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆயிரம் முறை சொல்லட்டும்" என்று இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முழங்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஷமி களைப்பினால் முழந்தாளிட்டார், உடனே அவர் சஜ்தா செய்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் பரப்பப்பட்டது. ஆனால் தான் சஜ்தா செய்யவில்லை என்று அப்போது கூறிய ஷமி , சஜ்தா என்று கூறியவர்கள் மீது கடுமையான கருத்துக்களையும் தெரிவித்தது சர்ச்சைக்குள்ளானது.
“எப்படி சஜ்தா விவகாரம் வந்தது? ராமர் கோயில் கட்டப்படும் போது ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் என்ன பிரச்சினை? ஆயிரம் முறை சொல்லட்டும். நான் அல்லாஹு அக்பர் என்று சொல்ல விரும்பினால் ஆயிரம் முறை சொல்வேன்” என முகமது ஷமி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டியின் போது அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுந்ததாக சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம். அது தொடர்பாகத்தான் தற்போது ஷமி இவ்வாறு கூறியுள்ளார்.
உண்மையில் இலங்கைக்கு எதிரான அந்த உலகக்கோப்பைப் போட்டியில் என்ன நடந்தது என்பதை யூ டியூப் சேனலில் ஷமி விளக்கும் போது, “நான் தொடர்ச்சியாக 5-வது ஓவரை வீசினேன், என் உடல் அனுமதிக்கும் இடத்தையும் தாண்டி முயற்சி எடுத்து வீசினேன். பந்து எட்ஜ் எடுக்காமல் நூலிழையில் மட்டையைத் தவற விட்டுச் சென்றது, எனவே அந்த 5-வது விக்கெட் விழுந்தவுடன் களைப்பினால் நான் முழந்தாளிட்டேன். யாரோ என்னைப் பாராட்ட சற்றே தள்ளியதால் கொஞ்சம் முன்னால் நகர்ந்தேன்
அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் விரைவாகப் பரவியது. என்ன நினைத்து விட்டார்கள் என்றால் நான் சஜ்தா செய்ய நினைத்ததாகக் கூறிவிட்டனர். ஆனால் நான் சஜ்தா செய்யவில்லை. நான் அவர்களுக்கு ஒரேயொரு அறிவுரையைத்தான் வழங்க விரும்புகிறேன். இது போன்ற தொந்தரவுகளைச் செய்ய வேண்டாம் என்பதுதான் என் அறிவுரை” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “இந்த விஷயத்தில் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் ஒரு முஸ்லிம். இதனை நான் முன்னரே தெரிவித்திருக்கிறேன். அதில் நான் பெருமை கொள்கிறேன். இந்தியனாக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன். எனக்கு நாடுதான் முதன்மை. எனவே இது யாருக்காவது பிரச்சினையானால் நான் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன். நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். என் நாட்டிற்காக ஆடுகிறேன். அதை விட எனக்கு வேறு எதுவும் பெரிது கிடையாது. சர்ச்சைகளை வேண்டுமென்றே சமூக ஊடகத்தார் செய்தால் நான் அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சஜ்தாவைப் பொறுத்தவரை நான் அதை விரும்பினால், அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் செய்வேன். இதைப் பற்றி வேறு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு மதத்திலும், மற்ற மதத்தைச் சேர்ந்த நபரை விரும்பாத 5 முதல் 10 நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். அதற்கு எதிராக எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT