Published : 13 Feb 2018 09:20 PM
Last Updated : 13 Feb 2018 09:20 PM
போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதமெடுத்த பிறகு இந்திய அணி பேட்டிங்கில் கடுமையாகச் சொதப்ப 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
ரோஹித் சர்மா 126 பந்துகளில் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து இங்கிடியின் உள்ளே வந்த எழும்பிய ஆஃப் கட்டருக்கு விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் ஆகி வெளியேறினார். 96 ரன்களில் இவர் இருந்த போது அப்பர் கட் ஒன்று ஃபைன் தேர்ட் மேனில் ஷாம்சியிடம் கேட்சாகச் செல்ல அதனை பிடித்து விட்டார் அவர், இதனால் தப்பி சதம் எடுத்தார் ரோஹித்.
மேலும் கோலி (36), ரஹானே (8) ஆகியோரது ரன் அவுட்களுக்கு ரோஹித் சர்மா காரணம். கோலி ரன் அவுட்டில் பாதிகாரணம், ரஹானே ரன் அவுட்டில் முழுக் காரணம்.
தென் ஆப்பிரிக்க அணி ரோஹித் சர்மாவை வீழ்த்தி புகுந்ததையடுத்து கடைசி 10 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்திய அணியின் 300 கனவுகளை தகர்த்தது. ஜொஹான்னஸ்பர்க் போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 9 ஓவர்கள் 1 மெய்டன் 51 ரன்கள் 4 விக்கெட்டுகள். இதில் அவரது ஐபிஎல் கேப்டன் தோனியின் விக்கெட்டும் அடங்கும். மோர்கெல் 10 ஓவர்களில் 2 மெய்டன்கள் 44 ரன்கள் என்று சிக்கனம் காட்ட இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்ஸீ 10 ஒவர்கள் வீசி 48 ரன்கள் என்று கட்டுப்படுத்தினார். இதில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அவர் விட்டுக் கொடுத்தார். பெலுக்வயோ 2 பவுண்டரிகளுடன் 8 ஓவர்களில் 34 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ரபாடா 9 ஓவர்களில் அதிகபட்சமாக 58 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் ஒரு போட்டியில் 0-வில் ஆட்டமிழந்தால் இந்திய அணியின் மிடில் ஆர்டர்கள் தோனி உட்பட ஆடியும் 100 ரன்களைத் தாண்டாது என்ற நிலையே உள்ளது. தோனி உண்மையில் தேவுகிறார், தேடுகிறார், தடவுகிறார்... ஆனால் ஊடகங்கள் அவர்தான் ஏதோ கேப்டன்சியே செய்கிறார் என்பது போல் ஆங்காங்கே செய்திகள் வெளியிட்டு வருகின்றன. நல்ல ‘லாபி’ நடைபெறுவதாகவே தோன்றுகிறது. அதே போல் 5 போட்டிகளாக ஒன்றுமே செய்யாத ஹர்திக் பாண்டியாவை அணியிலிருந்து நீக்காததற்கு அவர் மும்பை என்பதுதான் காரணமா என்ற ஐயமும் எழுகிறது. ஷ்ரேயஸ் ஐயர் என்பவரை கடுமையாகப் புரமோட் செய்கின்றனர், ஆனால் அவர் இந்த மட்டத்துக்குத் தகுதியானவர்தானா என்பதும் ஐயமாக உள்ளது. மணீஷ் பாண்டே என்ன தவறு செய்தார் பாவம்! ஒரு போட்டியில் கூட எடுக்காமல் அவரை பெஞ்சில் அமரவைக்கும் மனிதவள மேம்பாட்டு மூளையோ கோலி, ரவிசாஸ்திரியினுடையது?
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். ஷிகர் தவண் ஆக்ரோஷமாக ஆடி 23 பந்துகளில் 34 ரன்களில் 8 பவுண்டரிகள் விளாசி ரபாடாவின் எகிறு பந்துக்கு டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இவரது அதிரடியாலும் ரோஹித் சர்மா ரபாடாவை மேலேறி வந்து அடித்த அரக்கத்தனமான சிக்சரினாலும் 7.2 ஓவர்களில் 48 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது இந்திய அணி.
ரபாடா, மோர்கெல் டைட்டாக தொடக்கத்தில் வீசினர் ரன் வருவது கடினமாக இருந்தது, அப்போதுதான் ஷிகர் தவண் ரபாடாவை அடித்தால்தான் ஏதாவது செய்ய முடியும் என்று அவரது 150 கிமீ வேகப்பந்தை ஸ்கொயர்லெக்கிலும் ஸ்லிப் தலைக்கு மேலும் பவுண்டரிகள் விளாசினார் ரோஹித் சர்மாவும் உடனேயே அவரது பாணியைக் கடைபிடித்து ரபாடாவை மேலேறி வந்து லாங் ஆனில் அடித்த சிக்ஸ் மைதானத்துக்கு வெளியே சென்றது. அடுத்த பந்தே பழிவாங்கும் விதமாக் ரோஹித் சர்மாவின் உடலைத் தாக்கினார்.
தவண் புல் ஷாட்டில் வெளியேற அவரை பெவிலியனை நோக்கி கை காட்டி வழியனுப்பினார், இது ஆட்ட நடுவர் கவனத்துக்குச் சென்றிருக்கும். இப்போதெல்லாம் வழியனுப்புதல் விதிகளை மீறிய செயலாகும். பவர் பிளே 10 ஓவர்களில் இந்தியா 61/1. ரோஹித் சர்மா கொஞ்சம் மந்தமடைந்தார், அப்போது லுங்கி இங்கிடியின் 2 ஷார்ட் பிட்ச் பந்துகள் ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கும் பிறகு ஒன்று பாயிண்ட் பவுண்டரிக்கும் பறந்தன. டுமினி 17வது ஓவரில் வந்து முதல் 2 பந்துகளில் பவுண்டரி கொடுத்தார். ஷாம்சி எதிர்முனையில் வர ரோஹித் சர்மா அரைசதம் எடுத்தார். ஷாம்சி கோலியை பீட் செய்து ஸ்டம்பிங் அப்பீல் செய்தார், ஆனால் ரீப்ளேயில் கோலி நாட் அவுட் என்று தெரிந்தது.
கோலியின் ரன் தெரிவு ஷாட்களுக்கு மார்க்ரம் பீல்டர்களை நிறுத்தி வைத்துக் கட்டுப்படுத்த கோலி 54 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். மோர்கெல் பந்தை பின் காலில் சென்று ரோஹித் சர்மா தடுத்தாட பந்து அவருக்கு அருகில் இருக்க கோலி ஒரு ரன்னுக்காக முக்கால்வாசி தூரம் வந்து விட்டார், ரோஹித் ஓட மறுத்து விட்டார், டுமினி பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க கோலி ரன் அவுட். கோலி அவுட் ஆக தொய்வு ஏற்பட்டது அடுத்த 6 ஓவர்களில் வெறும் 23 ரன்களே வந்தது, ரஹானே 8 ரன்களில் மீண்டும் ரோஹித் சர்மாவின் அசட்டையினால் ரன் அவுட் ஆனார்.
18 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ரோஹித் சர்மா தனித்து விடப்பட இந்தியா 180/3 என்று இருந்தது, 300 ரன்கள் தேவைக்கு பின்னால் வரும் வீரர்களை ரோஹித் சர்மா நம்பியிருக்க வேண்டும். ரோஹித் சர்மா சதத்துக்காக பாடுபட தென் ஆப்பிரிக்கா அவருக்கு அதை கடினப்படுத்தியது, ஒருவிக்கெட் கீப்பர் கேட்ச் அப்பீல் எழுந்தது, பிறகு 96-ல் தேர்ட்மேனில் தூக்கி அடிக்க ஷம்சி அருமையான கேட்ச் வாய்ப்பைக் கோட்டை விட்டார். அதன் பிறகு 36வது ஓவரில் 107 பந்துகளில் தன் சதத்தை எடுத்தார் ரோஹித் சர்மா. ஷ்ரேயஸ் ஐயரும் ரோஹித் சர்மாவினால் ரன் அவுட் ஆகியிருப்பார் ஆனால் அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். ரோஹித் 115 ரன்களில் இருந்த போது லுங்கி இங்கிடியின் கூடுதல் பவுன்ஸ் மற்றும் உள்ளே நெருக்கமாக வந்த பந்துக்கு எட்ஜ் ஆனார். அடுத்த பந்தே அதிர்ச்சிகரமாக இங்கிடி பந்தில் பாண்டியா விக்கெட் கீப்பர் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். ஷ்ரேயஸ் ஐயர் 30 ரன்களில் இங்கிடி பந்தில் டாப் எட்ஜ் செய்து கிளாசன் கேட்சுக்கு வெளியேறினார். 14 பந்துகளில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பினிஷர் தோனியை நம்பியிருந்தது, அவரால் சமீபமாக ஒன்றுமே செய்ய முடியாதது இதிலும் தொடர்ந்தது, மிட் ஆஃபில் மார்க்ரமின் அபார கேட்சுக்கு அவர் 13 ரன்களுக்கு நடையைக் கட்டினார். கடைசி 10 ஓவர்களில் வெறும் 55 ரன்கள்தான். இந்தியா 274/7 என்று முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT