Published : 18 Feb 2018 02:22 AM
Last Updated : 18 Feb 2018 02:22 AM

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடர்: சென்னை அணி அசத்தல் வெற்றி- 3-1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது

கோவையில் நேற்று நடைபெற்ற ‘ஹீரோ ஐ லீக் 2017’ கால்பந்துப் போட்டியில், கோவா சர்ச்சில் பிரதர்ஸ் ஃபுட்பால் கிளப் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணி.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 10 நிமிடங்கள் கோவா அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். அந்த 10 நிமிடங்களில் சென்னை சிட்டி அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கினர். 26-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணியைச் சேர்ந்த, செர்பிய வீரர் அலெக்ஸாண்டர் ராகிக் முதல் கோலை அடித்தார். அடுத்த 3-வது நிமிடத்தில் கேப்டன் சூசைராஜ் 2-வது கோலை அடிக்க முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

54-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் அலெக்ஸாண்டர் ரொமாரியோ ஜேசுராஜ் இலக்கை நோக்கி பந்தை துல்லியமாக உதைத்தார். ஆனால் கோவா அணியின் கோல்கீப்பர் அதனை கோல் விழவிடாமல் தடுத்தார். அவர் மீது பட்டு திரும்பிய பந்தை அருகில் நின்ற சூசைராஜ், அற்புதமாக கோலாக மாற்றினார். இதனால் சென்னை அணி 3-0 என்ற வலுவான முன்னிலையை நோக்கிச் சென்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோவா அணி தரப்பில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை.

இன்ஜூரி நேரமாக 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதில் கோவா அணியின் ஓசாஜி மண்டே கோல் அடித்தார். அதன் பின்னர் மேற்கொண்டு அந்த அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாமல் போனது. முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி அணி வெற்றி பெற்றது. 2 கோல்கள் அடித்த சென்னை சிட்டி அணியின் கேப்டன் சூசைராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை 6 தோல்வி, 7 டிராக்களை பதிவு செய்துள்ளது. கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறியது. வரும் மார்ச் 2-ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவை நேரு விளையாட்டு அரங்கில் சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியும், மினர்வா பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x