Published : 05 Feb 2024 03:07 PM
Last Updated : 05 Feb 2024 03:07 PM

IND vs ENG 2-வது டெஸ்ட் | இங்கிலாந்து பேட்டர்களை சீர்குலைத்த அஸ்வின், பும்ரா - இந்திய அணி அபார வெற்றி!

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடர் 1 - 1 என்று சமன் ஆகியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 143 ரன்கள் பின்தங்கியது. பும்ரா மொத்தமாக ஆறு விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் இணை சுமாரான துவக்கமே கொடுத்தது. 13 ரன்களில் ரோஹித் விக்கெட்டாக, ஜெய்ஸ்வால் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் 30 ரன்களுக்குள் இந்திய அணி இரண்டு விக்கெட்களை இழந்தது. இதன்பின் வந்தவர்களில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவருக்கு அக்சர் படேல் உறுதுணையாக இருந்தார். கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடாத ஷுப்மன் கில் இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து அதிரடி சதம் விளாசினார். 147 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 104 ரன்கள் எடுத்து விக்கெட்டானர். அக்சர் படேல் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மற்றவர்களில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வின் தலா 29 ரன்கள் எடுத்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட், ரெஹான் அகமது 3 விக்கெட், ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

டெஸ்டின் 3-ம் நாள் ஆட்டம் முடிவில், 2-வது இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி. 332 ரன்கள் பின்தங்கிய நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. நிதானமாக தொடங்கினாலும், இந்திய வீரர் அக்சர் படேல் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்து சரிவை தொடங்கி வைத்தார். நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட ரெஹான் அகமதுவை (23 ரன்கள்) வீழ்த்தினார் அக்சர் படேல்.

இதன்பின் அஸ்வினும், பும்ராவும் இணைந்து இங்கிலாந்து பேட்டர்களை திணறச் செய்தனர். அபாயகரமான ஆலி போப், ஜோ ரூட் என இங்கிலாந்தின் தூண்களை சுலபமாக காலி செய்தார் அஸ்வின். தனது அடுத்தடுத்த ஓவர்களில் இந்த இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி அஸ்வின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்த இந்தியாவின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரித்தது.

அடுத்தடுத்த விக்கெட் சரிவுகளில், மறுமுனையில் இருந்த ஜாக் கிராவ்லி தனது தாக்குதல் பாணியை ஆட்டத்தை விடுத்து பொறுமையை கடைபிடித்தார். எனினும், 73 ரன்கள் எடுத்த அவரை குல்தீப் யாதவ் விக்கெட்டாக்கினார். ஜானி பேர்ஸ்டோவ்வை நிலைக்கவிடாமல் 26 ரன்களில் பும்ரா அவுட் ஆக்கினார்.

மிகவும் எதிர்பார்த்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை ஸ்ரேயஸ் ஐயர் ரன் அவுட் செய்தார். இதன்பின் வந்த பென் ஃபோக்ஸ் - டாம் ஹார்ட்லி இணை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. இருவரும் தலா 36 ரன்கள் எடுத்து விக்கெட் சரிவை தடுத்தாலும், பும்ரா தனது அசத்தல் பந்துவீச்சால் இருவரின் விக்கெட்டையும் அடுத்த ஓவர்களில் வீழ்த்தினார்.

இதன்பின் இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடர் 1 - 1 என்று சமன் ஆகியுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற உதவிய ஐஸ்ப்ரீத் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x