Published : 05 Feb 2024 06:19 AM
Last Updated : 05 Feb 2024 06:19 AM
விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஷுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. பின்னர்முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை நேற்று ரோஹித் சர்மா 13 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும் தொடங்கினர்.
ஆனால் தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோஹித் சர்மா மேலும் ரன் ஏதும் சேர்க்காமல், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்துஆட்டமிழந்தார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில்லும், ஸ்ரேயஸ் ஐயரும் இன்னிங்ஸை கட்டமைத்தனர். அணியின் ஸ்கோர் 111-ஆக இருந்தபோது ஸ்ரேயஸ் ஐயர், ஷோயிப் பஷிர் பந்தில் பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 52 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த ரஜத் பட்டிதார் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் சிறப்பாக விளையாடி னார். கடந்த சில போட்டிகளாக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து கொண்டிருந்த ஷுப்மன் கில் இந்த முறை அபாரமாக விளையாடி சதமடித்தார். 104 ரன்கள் சேர்த்த நிலையில், அவர் ஷோயிப் பஷிர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.
அக்சர் படேல் 84 பந்துகளில் 45 ரன்களை விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் அஸ்வின் மட்டும் 29 ரன்கள் சேர்த்தார். குல்தீப் யாதவ் 0, பும்ரா 0, ஸ்ரீகர் பரத் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 78.3 ஓவர்களில் 255 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட்களைச் சாய்த்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பின்னர் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கெட்டும், ஜாக் கிராவ்லியும் அதிரடியாக விளையாடினர். 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் கொடுத்து பென் டக்கெட் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து நைட் வாட்ச்மேனாக ரெஹான் அகமது களமிறக்கப்பட்டார். ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து ஒருவிக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. ஜாக் கிராவ்லி 29, ரெஹான் அகமது 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 332 ரன்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி.
3 சதம்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3-வது சதத்தை ஷுப்மன் கில் நேற்று விளாசினார்.
கடந்த சில டெஸ்ட் போட்டி களாக ஷுப்மன் கில் பெரிய அளவில் ரன் சேர்க்க வில்லை. கடந்த 12 இன்னிங்ஸ்களில் அவர் ஒருசதம் கூட விளாசவில்லை. இந்நிலையில் நேற்று 104 ரன்கள் விளாசி தனது ரன் வேட்கையை தணித்துக் கொண்டார் ஷுப்மன் கில், இதற்கு முன்பு கடைசியாக 2023-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் 128 ரன்கள் விளாசியிருந்தார். அதன் பிறகு 12 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் மொத்தமாக 197 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இதனால் கிரிக்கெட் விமர்சகர்களால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர்களது விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் சதம் விளாசி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார் கில்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை 2022-ம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக சட்டோகிராமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கில் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
500 விக்கெட்டை நெருங்குகிறார் அஸ்வின்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 497 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை அவர் எட்டுவதற்கு இன்னும் 3 விக்கெட்கள் மட்டுமே தேவை.விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்தச் சாதனையை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதைப் போலவே இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 184 போட்டிகளில் விளையாடி 695 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இந்தத் தொடரில் மேலும் 5 விக்கெட்களை வீழ்த்தி 700 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT