Published : 03 Feb 2018 07:04 PM
Last Updated : 03 Feb 2018 07:04 PM
சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 513 ரன்கள் குவித்தும் 2-வது இன்னிங்சில் 4-ம் நாளான இன்றைய தின முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
இலங்கை தன் முதல் இன்னிங்சில் மிகப்பெரிய 713 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்கதேச பவுலர் தைஜுல் இஸ்லாம் 67.3 ஓவர்கள் வீசி 219 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார், இவர் ஒருவர்தான் பந்துவீச்சில் இரட்டைச் சதம் அடித்தார், மெஹதி ஹசன் மிராஸ் 174 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சன்ஸாமுல் இஸ்லாம் 153 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மொத்தம் 199.3 ஓவர்கள் வங்கதேச அணியை மைதானம் முழுக்க ஓட ஓட விரட்டியது இலங்கை அணி.
200 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் தமிம் இக்பால் (41) விக்கெட்டை லக்ஷன் சண்டகனிடம் இழந்தது. விக்கெட் கீப்பர் கேட்ச் எடுத்தார். முன்னதாக இம்ருல் கயேஸ் 19 ரன்களில் திலுருவன் பெரேரா பந்தில் சந்திமாலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். நாளின் கடைசி ஓவரில் முஷ்பிகுர் ரஹீமை 2 ரன்களில் ரங்கனா ஹெராத் வீழ்த்த வங்கதேசம் 81/3 என்று நாளை 5-ம் நாள் 119 ரன்களை எடுத்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடுகிறது.
முதல் இன்னிங்ஸில் 176 ரன்கள் எடுத்த மோமினுல் ஆட்ட முடிவில் 18 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
“இந்த டெஸ்ட் போட்டியை வெல்ல எங்களுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே உள்ள ஸ்பாட்டில் பட்டு பந்துகள் கடுமையாகத் திரும்புகின்றன” என்றார் இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா.
.போராளி தைஜுல் இஸ்லாம் தினேஷ் சந்திமாலை 87 ரன்களில் வீழ்த்தினார், முன்னதாக மெஹதி ஹசன் 62 ரன்களில் இருந்த டிக்வெல்லாவை பெவிலியன் அனுப்பினார்.
அறிமுக வீச்சாளர் சன்சாமுல் இஸ்லாம் 32 ரன்களில் திலுருவன் பெரேறாவை எல்.பி.செய்து தன் முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இன்று காலை 504/3 என்று தொடங்கிய இலங்கை அணியில் தன் 2-வது டெஸ்ட்டில் ஆடும் ரோஷன் சில்வா சதம் கண்டார்.
230 பந்துகளில் 109 ரன்களை எடுத்த ரோஷன் சில்வா இன்று காலை முதல் விக்கெட்டாக வெளியேறினார்.
குசால் மெண்டிஸ் (196), தனஞ்ஜய டி சில்வா (173) ஆகியோருக்குப் பிறகு 3-வது சதநாயகனானார் ரோஷன் சில்வா. இவர் மெஹதி ஹசன் தாழ்வாக வீசிய பந்தை விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் எட்ஜ் செய்து அவுட் ஆனார்.
ரோஷன் சில்வா, சந்திமால் கூட்டணி 4-வது விக்கெட்டுக்காக 135 ரன்கள் சேர்த்து வங்கதேசத்தைச் சோர்வடையச் செய்தனர். ரோஷன் சில்வா தன் இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். இலங்கை அணி 713/9 என்று டிக்ளேர் செய்தது. இன்னும் 17 ரன்கள் அடித்திருந்தால் வங்கதேசத்தில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக மாறியிருக்கும்.
5-ம் நாள் பந்துகள் திரும்பும் பிட்சில் ஹெராத், திலுருவன், சண்டகன், லக்மல் ஆகியோரைச் சமாளித்து இன்னிங்ஸ் தோல்வியை வங்கதேசம் தவிர்க்குமா என்பது முதல் கேள்வி, பிறகு தோல்வியைத் தவிர்க்குமா என்பது இன்னொரு கேள்வி. 513 ரன்களை எடுத்து விட்டு ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவது என்றால் அது மிகப்பெரிய மன உளைச்சலை வங்கதேச வீர்ர்களுக்கும் நிர்வாகத்துக்கும் ஏற்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT