Published : 03 Feb 2024 06:56 AM
Last Updated : 03 Feb 2024 06:56 AM

IND vs ENG 2-வது டெஸ்ட் | ஜெய்ஸ்வால் 179* ரன்கள் விளாசல்: 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 336 ரன் குவிப்பு

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தனர்.

ரோஹித் சர்மா 41 பந்துகளில், 14 ரன்கள் எடுத்த நிலையில்சோயிப் பஷீர் பந்தில் பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் நின்ற ஆலி போப்பிடம் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரோஹித் சர்மா 17.3 ஓவர்களில் 40 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் 46 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 49 ரன் சேர்த்தது.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார். மட்டையை சுழற்றிய ஜெய்ஸ்வால் டாம் ஹார்ட்லி வீசிய 49-வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தை அவர், 151 பந்துகளில், 11பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் கடந்தார். சீராக ரன்கள் சேர்த்த ஸ்ரேயஸ் ஐயர் 59 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் டாம்ஹார்ட்லி பந்தில் பென் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்து நடையைகட்டினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 131 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் களமிறங்கிய ரஜத் பட்டிதார் 72 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள்எடுத்த நிலையில் ரெஹான் அகமது பந்தை தடுத்தாடியபோது போல்டானார். தொடர்ந்து அக்சர் படேல் 51 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களும், கர் பரத் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால் 257 பந்துகளில்,5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 179 ரன்களும் அஸ்வின் 5 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில்சோயிப் பஷீர், ரெஹான் அகமதுஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.

‘4 பேரும் மும்பை’: 23 வயதுக்குள்ளாகவே வெளிநாடு மற்றும் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இந்த வகை சாதனையில் ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேருமே ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடியவர்கள்.

'சீனியர் ஆண்டர்சன்': இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மிகவும் வயதான வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (41 வருடம் 187 நாட்கள்). இந்த பட்டியலில் ஜிம்பாப்வேயின் ஜான் ட்ரைகோஸ் (45 வருடம், 300 நாட்கள்) முதலிடத்தில் உள்ளார். அவர், 1993-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x