Published : 12 Feb 2018 08:22 PM
Last Updated : 12 Feb 2018 08:22 PM
பிங்க் உடையில் 4ம் ஒருநாள் போட்டியில் ராசி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா நாளை (செவ்வாய்) போர்ட் எலிசபெத் மைதானத்தில் தங்கள் வழக்கமான பச்சை உடையில் இந்திய அணியை 5-ம் ஒருநாள் (பகலிரவு) போட்டியில் எதிர்கொள்கிறது.
குறிப்பாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை பாடாய்ப்படுத்தி வரும் குல்தீப், சாஹல் ஜோடியை பிரித்து எடுத்து வென்றதும், இந்திய அணியை கடைசி ஓவர்களில் கட்டுப்படுத்தியதும், தாக்குதல் ஆட்டத்தை சாஹலை 2 சிக்சர்கள் மூலம் தொடங்கி வைத்த டிவில்லியர்ஸ் வருகையினாலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு புதிய உத்வேகம் கூடியுள்ளது.
தோனி இன்னும் 46 ரன்கள் எடுத்தால் 10,000 ஒருநாள் போட்டி ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார், நாளை நிச்சயம் தோனி இந்தச் சாதனையை நிகழ்த்துவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை விராட் கோலியின் பார்ம் பெரிய தலைவலியாக உள்ளது, இறங்கும்போதெல்லாம் அனாயசமாக அவர் சர்வசாதாரணமாக பெரிய அதிரடி இல்லாமலேயே பெரிய ஸ்கோர்களை எடுத்து விடுகிறார் என்பதே. அவரது விக்கெட்டை விரைவில் வீழ்த்தும் உத்தியை தென் ஆப்பிரிக்கா கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்
நிச்சயம் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயஸ் ஐயர் நிரூபிக்க வேண்டும், இவர்களிடமிருந்து பங்களிப்பு இல்லை, இதோடு ஷ்ரேயஸ் ஐயர் கேட்சைக் கோட்டை விடுபவராக இருக்கிறார், மணீஷ் பாண்டேயை, உமேஷ் யாதவ்வை அழைத்துச் சென்று வேடிக்கை பார்க்க வைக்கும் ஒரே அணித்தேர்வு நிர்வாகம் இந்திய அணி நிர்வாகமாகவே இருக்கும்.
போர்ட் எலிசபெத் மைதான ஆடுகளம் தென் ஆப்பிரிக்காவின் மெதுவான பிட்ச், எனவே இந்திய ஸ்பின் பவுலர்களுக்கு ஓரளவு உதவிகரமாக இருக்கும். இந்த மைதானத்தில் கடைசி 5 போட்டிகளில் சராசரியாக இன்னிங்ஸுக்கு 320 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. மதியம் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்திய அணி இந்தப் போட்டியில் வென்று முதன் முதலாக தென் ஆப்பிரிக்காவில் தொடரை வெல்லும் வரலாற்றை நிகழ்த்த நிச்சயம் ஆக்ரோஷமாக ஆடும் என்று எதிர்பார்க்கலாம், தென் ஆப்பிரிக்கா கடைசியாகப் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் களமிறங்கும். எனவே இன்னொரு விறுவிறுப்பான போட்டியாக இது அமையும்.
சாஹல், குல்தீப் யாதவுக்கு எதிராக கடந்த போட்டியில் கையாண்ட உத்தி கைகொடுத்ததால் நிச்சயம் நாளையும் அதே ஆக்ரோஷ பேட்டிங்கை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
சாஹல், குல்தீப் பிரச்சனை என்ன?
சாஹல், குல்தீப் போன்ற புதிர்வீச்சாளர்களிடம் உள்ள பிரச்சினை என்னவெனில் ஒன்று விக்கெட்டுகள் இல்லையேல் ரன்களை வழங்குவது என்று இருப்பதுதான், இடைப்பட்ட நிலையான இறுக்கமாக சில ஓவர்களை வீசி ரன்களைக் கட்டுப்படுத்தி நெருக்கடியை அதிகரித்து பிறகு விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவும் ரகம் இல்லை. அதனால்தான் இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்பதை விட ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் ஒரு சாதாரண ஸ்பின்னரை அணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஒரு தொடரில்தான் அபாரமாக வீச முடிந்தது, அதன் பிறகு அவர் பந்தை புரிந்து கொண்டதால் கடுமையாக சாத்து வாங்கி இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தே காணாமல் போய்விட்டார், எனவே உலகக்கோப்பையில் குல்தீப், சாஹல் சேவை தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அதிகம் எதிரணி வீரர்களின் கண்களில் காட்டக்கூடாது, காரணம் இவர்கள் வீசும் கைகள் எதிரணி பேட்ஸ்மென்களுக்கு பழக்கமாகிவிட்டால் சாத்துதான்! எனவே இது குறித்து மாற்று யோசனைகளை இந்திய அணி நிர்வாகம் வைத்துக் கொள்வது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT