Published : 02 Feb 2024 05:35 PM
Last Updated : 02 Feb 2024 05:35 PM
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. 150 ரன்கள் கடந்து நிதானமாக விளையாடி வருகிறார் இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா அவுட் ஆனார். இங்கிலாந்து அணியில் புதிய ஆஃப் ஸ்பின்னராக சேர்க்கபட்டுள்ள 20 வயதான ஷோயப் பஷீர் பந்துவீச்சில் ரோகித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். ரோகித் சர்மா 41 பந்துகளில் 14 ரன்களை (ஒரு பவுண்டரிகூட இல்லை) எடுத்தார்.
ரோகித்துக்கு பின் வந்த ஷுப்மன் கில் வேகமாக ஐந்து பவுண்டரிகளை விளாசினார். எனினும், மீண்டும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் 34 ரன்களில் இரண்டாவது விக்கெட்டாக வெளியேறினார். ஸ்ரேயஸ் ஐயரும் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி 27 ரன்களுக்கு நடையைக்கட்டினார்.
இப்போட்டியில் இந்தியா சார்பில் அறிமுக வீரராக களம்கண்ட ரஜத் படிதார் 32 ரன்கள் எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்களை இங்கிலாந்து பவுலர்கள் சாய்த்தாலும், மறுமுனையில் ஓப்பனிங் இறங்கி நங்கூரமிட்டார் இந்திய வீரர் ஜெய்ஸ்வால். விக்கெட் சரிவுகளை கண்டு நெருக்கடியாக நினைக்காமல் நிதானமாக, அதேநேரம் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி சதம் பதிவு செய்தார். அவரின் ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் மெதுமெதுவாக உயர்ந்தது.
ஜெய்ஸ்வாலுக்கு துணையாக நிற்க மற்ற வீரர்கள் தவறினர். அக்சர் படேல் 27 ரன்கள், கேஎஸ் பரத் 17 ரன்கள் என கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் 179 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அதேபோல் அஸ்வின் 5 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இங்கிலாந்து சார்பில் ஷோயப் பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT