Published : 12 Feb 2018 03:16 PM
Last Updated : 12 Feb 2018 03:16 PM
ஒருநாள் போட்டிகளில் கடந்த 12 மாதங்களாக மோசமாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் புத்துணர்வுடன் கூடிய இளம் ரத்தங்களை அணிக்குள் கொண்டு வருவது மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் கூடிய தயாரிப்பில் ஈடுபடும் என்று ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்தார்.
அதாவது உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. தற்போது முத்தரப்பு டி20 தொடரில் ஆடும் இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் டேரன் லீ மேன் கவனத்தை ஈர்த்துள்ளனர், இதனையடுத்து 2019 இங்கிலாந்து உலகக்கோப்பைக்கு இளம் ரத்தங்கள், ஆக்ரோஷமான அதிரடி அணுகுமுறை ஆகியவற்றை உடைய ஒரு அணி வேண்டும் என்று டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இளம் வீரர்கள் பலர் தங்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்தி வருவதையடுத்து ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியிலும், அணுகுமுறையிலும் புத்துணர்விலும் ஆக்ரோஷம் காட்டக்கூடிய சில மாற்றங்கள் ஏற்படும் என்று டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.
2019 உலகக்கோப்பைக்கு முன் இன்னும் ஆஸ்திரேலியாவுக்கு 20-25 போட்டிகளே உள்ளன. எனவே இப்போதே 2019 உலகக்கோப்பைக்கான அணி குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் கூறுகிறார் டேரன் லீ மேன்.
இது குறித்து டேரன் லீ மேன் கூறியதாவது:
முடிவுகள் என்பது எங்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவது என்பதில்தான் உள்ளது. டெஸ்டில் என்ன நடக்கிறது என்பதையும், டெஸ்ட் அல்லாத வடிவத்துக்குத் திரும்பும் போதும் சிலரை நீக்கி, ஆக்ரோஷமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தியதால் ஒருநாள் போட்டிகளில் நிலையான ஒரு அணி அமையாமல் போனது.
எனவே அடுத்த 6 மாதங்களுக்கு நிலையான ஒரு அணி ஆடுவதைப் பார்க்க விரும்புகிறேன். இதில் எப்படி ஆடுகிறோம், ஆட்டத்தின் முடிவுகள் எவ்விதம் அமைகின்றன ஆகியவற்றைப் பார்க்க விரும்புகிறேன்.
அணியின் அணுகுமுறை மாறும், இங்கிலாந்து பிட்ச்கள் மட்டையாளர்களுக்கு சாதகமாக உள்ளன, அதே வேளையில் ஸ்விங் பந்து வீச்சுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஒரு நிச்சயமான அணுகுமுறை தேவைதான் ஆனால் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறிக் கொள்ளவும் வேண்டும்.
ஒவ்வொரு ஆஷஸ் தொடர் முடியும் போதும் ஒருநாள் தொடரின் போது வீரர்கள் களைப்படைந்து விடுகின்றனர், நாங்கள் எப்போதும் ஒரு 30-40 ரன்களைக் கூடுதலாக எடுப்பது, எதிரணியினரின் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவது என்பதைச் செய்து வந்திருக்கிறோம், ஆனால் ஆஷஸ் தொடருக்குப் பிறகு சமீப காலங்களில் இந்த ஒருநாள் தொடர்களில் இது நடப்பதில்லை, இதனால் தோல்விகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
டி20-யில் மேம்பாடடைந்த ஆட்டம் சில புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. புதிய வீரர்கள் உள்ளே வரும்போது பயிற்சியாளராக எனக்கும் என் குழுவுக்கும் உற்சாகமாக உள்ளது.
தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன் நாங்கள் அமர்ந்து சில முடிவுகளை எடுக்கவிருக்கிறோம். உலகக்கோப்பை விரைவில் வந்து விடும். அதற்கு முன் 22 ஒருநாள் போட்டிகள்தான் உள்ளன. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அதிக ரன்கள் குவிக்கும் ஒரு தொடராகவே அமைய வாய்ப்புள்ளது. எனவே இதற்குத் தக்கவாறு அணியை உருவாக்கித் தயார்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார் டேரன் லீ மேன்.
டி ஆர்க்கி, கிறிஸ் லின் உட்பட ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியில் சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT