Published : 30 Jan 2024 09:49 AM
Last Updated : 30 Jan 2024 09:49 AM

‘Never Give Up’ - 43 வயதில் ரோஹன் போபண்ணாவின் கிராண்ட்ஸ்லாம் வெற்றி சொல்லும் பாடம்

ரோஹன் போபண்ணா

வயது வெறும் நம்பர் மட்டும் தான் என பல்வேறு தருணங்களில் பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனாலும் விளையாட்டு உலகில் ஆர்வத்துடன் செயல்படும் அனுபவ வீரர்கள் தங்கள் உடல் அனுமதிக்காத போதும் அதை நிறுத்திக் கொள்வது இல்லை.

அதில் சிலர் தங்களது விளையாட்டு கேரியரின் கடைசி கட்டம் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். வெகு சிலர் மட்டுமே தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துவார்கள். பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களை ‘ஓல்ட் வார் ஹார்ஸ்’ என ஆங்கிலத்தில் சொல்வது உண்டு. அதற்கு நெஞ்சுரம் வேண்டும். அந்த வகையைச் சேர்ந்தவர் தான் இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணா.

37 வயதில் தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இதோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமகன் மகேந்திர சிங் தோனி 42 வயதில் வரும் ஐபிஎல் சீசனில் அணியை வழிநடத்த ஆயத்தமாகி வருகிறார். இந்த மகத்தான மாவீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் ரோஹன் போபண்ணா.

சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் போற்றி பாடி பதிவிடுகின்றனர். 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது தான் இதற்கு காரணம். அதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் வென்ற வயதான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அவரது பயணம் டென்னிஸ் மட்டுமல்லாது பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வரும் இளம் வீரர்களுக்கு பால பாடமாக அமைந்துள்ளது. அது என்னவென்றால் ‘ரோஹன் போபண்ணாவை போல் நில்லாமல் ஓடு.. கோல்ட் தேடி வரும்’ என்பதே.

11 வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய அவர், இப்போது 43 வயதை எட்டியும் ராக்கெட்டை கைகளில் ஏந்தி, ஆடுகளத்தில் விடாமுயற்சியுடன் போராடி வருகிறார். 2006-ல் அவரது கிராண்ட்ஸ்லாம் பயணம் தொடங்கியது. ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என களமாடி உள்ளார்.

இரட்டையர் பிரிவில் அமெரிக்க ஓபனில் 2010, 2023 சீசனில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். பிரெஞ்சு ஓபனில் 2022 சீசனில் அரை இறுதி ஆட்டத்தில் ஆடினார். விம்பிள்டனில் 2013, 2015 மற்றும் 2023-ல் அரை இறுதியில் விளையாடினார். இதோ நடப்பு ஆஸ்திரேலிய சீசனில் மேத்யூ எப்டன் உடன் இணைந்து பட்டம் வென்றுள்ளார். இவருடன் தான் கடந்த 2023 அமெரிக்க ஓபன் இறுதியில் தோல்வியை தழுவி இருந்தார். நடப்பு ஆஸ்திரேலிய சீசனின் முதல் போட்டியில் 0-5 என பின்தங்கிய நிலையில் இருந்து தான் அவரது வெற்றி பயணம் தொடங்கியது. கடைசியாக 2010-ல் அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையரில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு கடந்த 2023-ல் தான் மீண்டும் இந்த பிரிவில் இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்த 13 ஆண்டுகால இடைவெளியில் 19 இணை, 61 முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடிய நெடும் பயணம் அவருடையது. இந்த இடைப்பட்ட நேரத்தை தன்னம்பிக்கையால் போபண்ணா வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த 2023 மற்றும் 2018 ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வியை தழுவி இருந்தார். 2017 பிரெஞ்சு ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.

‘நான் லெவல் 43-ல் உள்ளேன்’ - ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவு வெற்றிக்கு பிறகு போபண்ணா தெரிவித்தது: “நான் வெற்றி பெறாத காரணத்தால் ஓய்வு பெறலாம் என கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லி இருந்தேன். சுமார் ஐந்து மாத காலம் வெற்றி பெறாமல் இருந்தேன். அது எனது கடைசி கட்டமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், எனது விடாமுயற்சியும், எனக்குள் இருந்தே ஏதோ ஒன்றும் அதை கைவிடாத வகையில் செய்தது.

இந்த வெற்றியில் எனது இணையர் மேத்யூ எப்டனின் பங்கு முக்கியமானது. கடந்த சில சீசன்களாக நாங்கள் அபாரமாக செயல்பட்டோம். அதை இங்கு அறுவடை செய்துள்ளோம். இந்த வெற்றி ரொம்பவே ஸ்பெஷல்.

டென்னிஸ் விளையாட்டு சிறந்த ஆசான். அந்த வகையில் என்னோடு பத்து ஆண்டுகளாக இருக்கும் ஸ்காட் டேவிட் எனக்கு சிறந்த ஆசிரியராக உள்ளார். இது மிகவும் கடினமான பயணம். இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல உங்களுடையதும் தான்” என தெரிவித்தார். தனது வயதை ‘லெவல் 43’ என அவர் குறிப்பிடுகிறார். இந்த வெற்றியின் மூலமாக இந்திய மதிப்பில் ரூ.3.98 கோடியை பரிசு தொகையாக வென்றுள்ளது போபண்ணா இணை.

ரோஹன் போபண்ணாவின் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் வெற்றி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பாடமாக அமைந்துள்ளது. அது என்னவென்றால் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் கைவிடாமல் போராட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x