Published : 30 Jan 2024 09:03 AM
Last Updated : 30 Jan 2024 09:03 AM
விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரர்களான கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். இவர்களுக்கு பதிலாக நடுவரிசை பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான், இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வதுடெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதிவிசாகப் பட்டினத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.
ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில்ஜடேஜாவுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அதேவேளையில்கே.எல்.ராகுலுக்கு தொடை பகுதியில் உள்ள தசைநாரில் வலி ஏற்பட்டது. இதன் காரணமாக இவர்கள், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர்களுக்கு மாற்றாக 3 வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நடுவரிசை பேட்ஸ்மேனான மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விசாகப்பட்டினம் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. தற்போது கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.
இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கே.எல்.ராகுல் இடத்தில் ரஜத் பட்டிதார் களமிறங்கக்கூடும். அவர், விராட் கோலிக்கு பதிலாக அணிக்குள் கொண்டுவரப்பட்டிருந்தார். ஜடேஜாவுக்கு மாற்று வீரரை களமிறக்குவதில் இந்திய அணி சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று கருதப்படுகிறது.
ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஐசிசி கண்டிப்பு: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விதிமுறைகளை மீறிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கண்டித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்ஸின் 81-வது ஓவரை ஜஸ்பிரீத் பும்ரா வீசினார். அப்போது அவரது பந்தை தட்டிவிட்டு இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆலி போப் ரன் சேர்க்க விரைந்து ஓடினார். அந்த நேரத்தில் ஜஸ்பிரீத் பும்ரா ஆடுகள பகுதியில் நின்றிருந்தார். ஆலி போப் ஓடிவருதை பார்த்த போதிலும் பும்ரா நகரவில்லை. இதனால் ஆலி போப், பும்ராவின் தோள்பட்டையை உரசியபடி ஓடினார்.
இது ஐசிசி விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோர் பும்ரா மீது குற்றச்சாட்டை சுமத்தினர். பும்ரா தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதால் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. சர்வதேச போட்டியின் போது எதிரணி வீரர், நடுவர் அல்லது ஏதேனும் ஒரு நபருடன் உடல் ரீதியாக மோதக்கூடாது என்ற விதி 2.12 ஐ மீறியதால் பும்ராவுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியை ஐசிசி வழங்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT