Published : 02 Feb 2018 03:00 PM
Last Updated : 02 Feb 2018 03:00 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பன் மைதானத்தில் நேற்று ஸ்பின்னர்கள் மற்றும் விராட் கோலி சதம், ரஹானே அரைசதம் ஆகியவற்றினால் இந்தியா அபாரமான ஒரு வெற்றியை ஈட்டியது.
இதில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இலக்கு விரட்டல் புகழ் விராட் கோலி இலக்கை துரத்தும் போது தனது 20-வது சதத்தை அடித்தார், இதில் 18 சதங்கள் வெற்றிச்சதமாகும். மொத்தம் இதுவரை 33 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்காவில் இவரது முதல் ஒருநாள் சதம்.
இதன் மூலம் கோலி ஆடிய ஒவ்வொரு நாட்டிலும் சதங்களை எடுத்துள்ளார். இந்தியா உட்பட ஐசிசி முழு உறுப்பு நாடுகள் ஒன்பதிலும் ஆடியுள்ளார். வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை, மே.இ.தீவுகள், இங்கிலாந்து, நியூஸிலாந்து தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே என்று அனைத்து நாடுகளிலும் சதம் எடுத்துள்ளார் விராட் கோலி.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூரியா இதே சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மே.இ.தீவுகளில் சதம் எடுத்ததில்லை. ஜெயசூரியா ஜிம்பாப்வேயில் சதம் எடுத்ததில்லை. கோலியும் பாகிஸ்தானில் இன்னமும் விளையாடவில்லை.
குல்தீப் யாதவ், சாஹல்:
டர்பன் போட்டியில் குல்தீப் யாதவ் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சாஹல் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்காவில் இந்திய ஸ்பின்னர்கள் ஒருநாள் போட்டி ஒன்றில் 5 அல்லது அதற்கும் கூடுதலாக விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 2ம் முறை. இருவருமே சேர்ந்து 4 பவுண்டரிகளை மட்டுமே கொடுத்தனர், இதுதான் தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சரிவுக்குக் காரணமானது.
அஜிங்கிய ரஹானே:
அஜிங்கிய ரஹானே நேற்று ஆக்ரோஷமாக ஆடி 79 ரன்களை எடுத்தார், இது அவருடைய தொடர்ச்சியான 5-வது அரைசதமாகும். இதற்கு முன்னர் ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் எடுத்துள்ளார். கோலி 2012, 2013-ம் ஆண்டுகளில் 5 அரைசதங்களைத் தொடர்ச்சியாக எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1994-ல் 5 அரைசதங்கள் தொடர்ந்து எடுத்துள்ளார். ராகுல் திராவிடும் இதே சாதனையைச் செய்திருக்கிறார்.
கோலியும் ரஹானேவும் நேற்று 3-வது விக்கெட்டுக்காஅக் 189 ரன்களைச் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்குமான 3வது அதிகபட்ச ரன் கூட்டணியாகும் இது. மேலும் மார்டின் கப்தில், ராஸ் டெய்லர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 180 ரன்கள் சாதனையையும் கோலி-ரஹானே கூட்டணி முறியடித்தது.
தென் ஆப்பிரிக்கா 17 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருந்தது, இது 18 ஆகாமல் கோலி படை தடுத்து நிறுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT