Published : 29 Jan 2024 05:00 PM
Last Updated : 29 Jan 2024 05:00 PM

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றது ஏன்? - காரணங்களை அடுக்கும் ரோகித், திராவிட்

ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றதையடுத்து தோல்விக்கான காரணங்களை கேப்டன் ரோகித் சர்மாவும், ராகுல் திராவிட்டும் அடுக்கியுள்ளனர்.

தோல்விக்குப் பின் பேசிய ரோகித் சர்மா, "சுவருக்கு எதிராக நிறுத்தப்படுகிறோம் என்றால் நாம் தைரியமாக அதை எதிர்கொள்ள வேண்டும். நாம் அதைச் செய்யவில்லை. பேட்டிங்கில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆடியிருக்க வேண்டும். நாங்கள் சான்ஸ் எடுக்கவில்லை. ஆனால் இப்படியும் நடக்கவே செய்யும். ஆலி போப் ஆடிய இன்னிங்ஸ் இந்தியாவில் ஆடப்பட்ட சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. நாம் நம் தொப்பியை மரியாதை நிமித்தம் கழற்றி ‘வெல் பிளேய்டு’ என்று பாராட்டத்தான் வேண்டும். மிகவும் நேர்த்தியான ஒரு இன்னிங்ஸ். 190 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகு நாம் முன்னணியில் இருக்கிறோம் என்று தான் நினைத்தோம். அதன் பிறகு தனிச்சிறப்பான பேட்டிங்கை ஆடினார் போப். இந்தியாவில் நான் பார்த்ததிலேயே வெளிநாட்டு வீரர் ஒருவர் ஆடிய ஆகச்சிறந்த இன்னிங்ஸ் போப்புடையது.

இருந்தாலும் 230 ரன்கள் சேஸ் செய்யக் கூடியதே என்று நான் நம்பினேன். பிட்சில் பெரிதாக அச்சுறுத்தல் ஏதுமில்லை. சரியாக நாங்கள் பேட் செய்யவில்லை. பவுலிங்கையும் சரியான இடத்தில்தான் வீசினோம். ஒரு நாள் ஆட்டம் முடிந்த பின்பே எங்கு தவறு, எங்கு சரி என்பதை நாம் அலச வேண்டும். நாங்களும் அப்படித்தான் செய்தோம். பவுலர்கள் திட்டமிட்டப்படியே வீசினார்கள். ஒன்று, இரண்டு விஷயங்களைப் பார்க்க முடியவில்லை. ஒரு அணியாக வீழ்ந்தோம். கடைசியில் பும்ராவும், சிராஜும் 5ம் நாளுக்கு ஆட்டத்தை எடுத்துச் செல்வார்கள் என்றே நினைத்தேன். 20-30 ரன்கள் தேவை என்னும் போது எதுவும் நடக்கும். கீழ் வரிசை வீரர்கள் மேல்வரிசை வீரர்களுக்கு பாடம் எடுத்தனர் என்றே கூற வேண்டும்" என்று தெரிவித்தார்.

ராகுல் திராவிட் பேசுகையில், "முதல் இன்னிங்ஸில் மேலும் 70 ரன்களை எடுத்திருக்க வேண்டும். பிட்ச் அப்போது பேட்டிங்குக்கு சாதகமாகவே இருந்தது. பேட்டர்கள் ஸ்டார்ட் கொடுத்து ஆட்டமிழந்து விட்டனர். ஒருவர் கூட சதம் எடுக்கவில்லை. யாராவது ஒருவர் பெரிய சதத்திற்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் சதமே இல்லை. எனவே முதல் இன்னிங்சில் கூடுதலாக 70-80 ரன்களை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

2வது இன்னிங்ஸில் அதுவும் இந்தியாவில் 230 ரன்கள் மிக மிகச் சவாலானது. 230 ரன்களை விரட்டுவது கடினம். நான் சரியாக ஆடாத வீரர்களைக் குறை கூறவில்லை. ராகுல் ஷார்ட் பிட்ச் பந்தை சரியாக ஆடவில்லை. நேராக மிட் விக்கெட் கையில் போய் உட்கார்ந்தது. முதல் இன்னிங்ஸில் 500 ரன்களை எடுத்திருந்தால் நாம் இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்களை விரட்ட நேரிட்டிருக்காது.

ஆனால் மீண்டும் கூறுகிறேன். இந்தியாவில் வந்து 2வது இன்னிங்சில் 420 ரன்களை குவிக்கும் அணிகள் இல்லை. அதே போல் ஆலி போப் எடுத்த 196 ரன்களும் அசாதாரணமானது. தரமான நம் பந்து வீச்சுக்கு எதிராக ஆலி போப் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப்களை மிகத்திறம்பட பயன்படுத்தினார். நிறைய வீரர்கள் இப்படி ஆடி நான் பார்த்ததில்லை. உள்ளபடியே கூற வேண்டுமென்றால் சில ஆண்டுகளாக சவாலான பிட்ச்களை இளம் வீரர்கள் எதிர்கொள்கின்றனர். அதனால் அவர்களால் விரைவில் தங்கள் ஆட்டத்தை அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஆனால் திறமை உள்ளது. சில காலம் பிடிக்கும். அவர்கள் கடினமாக உழைக்கின்றனர். தொடர்ந்து முன்னேற வேண்டும். இதுபோன்ற பிட்ச்களில் ஆடும் திறமைகளை வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் பாஸ்பால் ஆடுகிறார்கள் என்றால் அதை எதிர்கொள்ள இன்னும் கடுமையான உத்திகளை நாம் வளர்த்தெடுத்து அமல்படுத்த வேண்டும். இன்னும் கடினமான லெந்த்களில் வீசி அவர்களை இதே ஷாட்களில் வீழ்த்த வேண்டும். அடுத்த போட்டியில் இது சரியாகும் என்று நினைக்கிறேன். அவர்களை தவறிழைக்கச் செய்ய முடியும்" என கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x