Published : 27 Jan 2024 12:33 PM
Last Updated : 27 Jan 2024 12:33 PM

34 பவுண்டரிகள், 26 சிக்சர்கள்... - 147 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்த தன்மய் அகர்வால்

செகந்தராபாத்: ரஞ்சி கோப்பை போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 147 பந்துகளில் முச்சதம் விளாசி வரலாறு படைத்தார் ஹைதராபாத் பேட்டர் தன்மய அகர்வால். மொத்தத்தில் அவர் 181 பந்துகள் ஆடி 34 பவுண்டரிகள் 26 சிக்சர்களுடன் 366 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருக்கான ரஞ்சி சாதனையான 442 ரன்களை அவர் உடைப்பார் என்று எதிர்பார்த்தது இயலாமல் போனது.

செகந்தராபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சக தொடக்க வீரர் ராகுல் சிங் அவர் பங்கிற்கு 105 பந்துகளில் 26 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 185 ரன்கள் விளாச, தன்மய் அகர்வாலும் இவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக சாதனையான 40 ஓவர்களில் 449 ரன்களை அதிரடியாகக் குவித்தனர். தற்போது ஹைதராபாத் அணி 615/4 என்று டிக்ளேர் செய்தது. அருணாச்சலப் பிரதேச அணி தன் முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்குச் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ட்ரைக் ரேட்டில் 200% வைத்து தன்மய் அகர்வால் 4வது சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டுக்கான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய இன்னிங்ஸ் என்ற விதத்திலும் தன்மய் அகர்வால் இன்னொரு சாதனையையும் நிகழ்த்தினார்.

அதே போல் 147 பந்துகளில் முச்சதம் எடுத்து புதிய ரஞ்சி சாதனை படைத்ததோடு முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக 200 ரன்களிலிருந்து 300 ரன்களை எட்டுவதற்கு 28 பந்துகளையே ஆடினார் தன்மய் அகர்வால்.

தன்மய் அகர்வால்-ராகுல் சிங் எடுத்த முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 449 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய ஜோடிகளில் 5வது சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர். அதேபோல் 26 சிக்சர்களை விளாசி முதல் தர கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களுக்கான உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். முன்னதாக நியூஸிலாந்தின் கொலின் மன்ரோ ஆக்லாந்துக்காக 2014/15-ல் 281 ரன்களை எடுத்த போடு அடித்த 23 சிக்சர்கள்தான் முதல் தர கிரிக்கெட் சாதனையாக இருந்தது.

தன்மய் மட்டும் 366 ரன்களில் ஆட்டமிழக்காமல் 443 ரன்களை எடுத்திருந்தால் 1948-ம் ஆண்டில் மகாராஷ்ட்ராவுக்காக பாவ்சாகேப் நிம்பல்கரின் சாதனையை உடைத்திருப்பார்.

ஒட்டுமொத்த தனிப்பட்ட முதல் தர கிரிக்கெட் ஸ்கோருக்கான சாதனையை முறியடிக்க முடியாத இடத்தில் உள்ள பிரையன் லாரா வைத்துள்ளார். லாரா 1994ம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டியில் 501 ரன்கள் குவித்து நாட் அவுட்டாக திகழ்ந்ததுதான் இன்று வரை உலக சாதனையாக இருந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x