Published : 27 Jan 2024 11:58 AM
Last Updated : 27 Jan 2024 11:58 AM
183 டெஸ்ட் போட்டிகளில் 690 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் அசாத்திய ஸ்விங் பவுலராக 20 ஆண்டுகளாக இங்கிலாந்துக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் நடப்பு இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடது கை ஸ்பின்னராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது புதிய பந்தில் ஸ்விங்கையும் பந்து பழசானவுடன் இடது கை ஸ்பின்னையும் வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கர்சான் காவ்ரி என்ற இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் பந்து வீச்சிலும் வல்லவர். அதுபோல் ஜேம்ஸ் ஆண்டர்சன் இப்போது வலைப்பயிற்சியில் முழுவதும் இடது கை ஸ்பின் பவுலிங்கை வீசியது பலருக்கும் பல ஊகங்களைக் கிளப்பியுள்ளது. முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், வலைப்பயிற்சி முழுவதும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடது கை சுழற்பந்து வீசியதை கூறி அவரை வரும் டெஸ்ட் போட்டிகளில் சீமராகவும் ஸ்பின்னராகவும் பயன்படுத்தலாம் என்று தெரிவித்து ஆச்சரியப்பட வைத்தார்.
இங்கிலாந்து அணியில் ஹார்ட்லி, ஜாக் லீச், ரெஹான் அகமது, போன்ற தொழில்ரீதியான ஸ்பின் பவுலர்கள் இருந்தாலும் இன்றைய போட்டியில் ஜோ ரூட் தான் அபாரமாக வீசினார். ரூட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றவர்கள் சரியாக வீசவில்லை. எந்த லெந்தில் வீசுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. செம சாத்து வாங்கினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்களைக் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது.
நடந்து வரும் ஹைதராபாத் டெஸ்ட்டில் மார்க் உட் மட்டுமே ஒரே வேகப்பந்து வீச்சாளராகச் சேர்க்கப்பட்டது உத்தி ரீதியான தவறு என்று விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஜேம்ஸ் ஆண்டர்சனைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஜெய்ஸ்வாலைக் காலி செய்திருந்தால் இந்திய அணி திணறியிருக்கும் என்றே தெரிகிறது.
ஆண்டர்சனை உட்கார வைத்தது தொடர்பாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கருத்து கூறும்போது, “எங்களின் கிரேட்டஸ்ட் கிரிக்கெட்டர் ஒருவரை உட்கார வைக்கிறீர்கள். துணைக்கண்ட பிட்ச்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பல சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பது கூடவா தெரியாது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்திய பிட்ச்களுக்கு ஏற்ப ஸ்பின் பந்துகளையும் வீசத் தயாராகி வருகிறார். ஜாக் லீச்சிடம் உதவி பெற்று ஜேம்ஸ் ஆண்டர்சன் வலைப்பயிற்சியில் இடது கை ஸ்பின் பவுலிங் வீசி வருகிறார். நல்ல லெந்தில் பந்தை பிட்ச் செய்கிறார் என்று அவரது ஸ்பின் பவுலிங் பற்றி இங்கிலாந்து தரப்பு கூறி வருகிறது. ஆண்டர்சன் வீசிய இடது கை ஸ்பின் பவுலிங் குறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. பெரிய திரையில் அது காட்டப்பட்டபோது ஆண்டர்சனே சிரித்து மகிழ்ந்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஸ்பின் பவுலிங்கைப் பார்த்த முன்னாள் இடது கை ஸ்பின்னரான ரவி சாஸ்திரி வர்ணனையில் புகழ்ந்து தள்ளினார். "பந்து கைகளிலிருந்து பிரமாதமாக ரிலீஸ் ஆகி வருகிறது. வெல் டன் ஜிம்மி" என்று புகழ்ந்தார்.
James Anderson, copying Jack Leach and bowling with his left hand pic.twitter.com/XSZCnNzJ4U
— Arya_Sinha9 (@Yobitch92321581) January 27, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT