Published : 26 Jan 2024 06:51 PM
Last Updated : 26 Jan 2024 06:51 PM
ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி தனது 31-வது அரை சதத்தை கடந்தார். பென் ஸ்டோக்ஸ் 88 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள்எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டானார். முடிவில் இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 27 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜாக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 பந்துகளில், 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 76 ரன்களும் ஷுப்மன் கில் 43 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது இந்திய அணி. ஜெய்ஸ்வால் 80 ரன்களில் ஆட்டமிழக்க, கில் 23 ரன்களுக்கு நடையைக்கட்டினார். இதன் கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் இணை சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. இதில் ஸ்ரேயஸ் 34 ரன்களுக்கு விக்கெட்டானார். மற்றொரு பக்கம் சிறப்பாக ஆடி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கேஎல் ராகுல்
அடுத்து இறங்கிய ஜடேஜா - ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்து ரன்கள் குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்த நிலையில் 41 ரன்களில் அவுட்டாக, அஸ்வின் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் ரன் அவுட்டானார். இதன்பின் வந்த அக்சர் படேல் நிதானமாக ஆடினார். இறுதியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா 81 ரன்கள், அக்சர் படேல் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதனால் இந்திய அணி இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT