Published : 25 Jan 2024 06:57 PM
Last Updated : 25 Jan 2024 06:57 PM
துபாய்: ஐசிசி வழங்கும் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் இந்தியாவின் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டின் PLAYER OF THE YEAR விருதை அதிக முறை வென்ற வீரர் என்ற புதிய சாதனையும் விராட் கோலி படைத்தார். இந்த விருது நான்காவது முறையாக விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்களை குவித்து சாதனை படைத்த விராட் கோலி, உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் விராட் கோலியின் பங்களிப்பு பெரும் பங்கு வகித்தது. 2003-ல் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை முந்தி மொத்தமாக இந்த தொடரில் மட்டும் 765 ரன்கள் குவித்தார் கோலி.
மேலும், நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஒரு சதம் உட்பட மூன்று சதங்களை எடுத்ததுடன் தொடரில் 95.62 சராசரி மற்றும் 90.31 ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்தார். மேலும் இதே தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சச்சினின் சாதனையும் கோலி முறியடித்தார்.
மொத்தமாக, 2023-ம் ஆண்டில் 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 6 சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்களைப் பதிவுசெய்து, 72.47 சராசரியுடன் 1377 ரன்கள் எடுத்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல், 2023-ல் 27 போட்டிகளில் விளையாடி 1377 ரன்கள், 1 விக்கெட் மற்றும் 12 கேட்சுகள் எடுத்திருந்தார் விராட் கோலி. இந்த காரணங்களால் ஐசிசி 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை விராட் கோலிக்கு அறிவித்துள்ளது.
முன்னதாக, ஐசிசி வழங்கும் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT