Published : 03 Feb 2018 12:51 PM
Last Updated : 03 Feb 2018 12:51 PM
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் நீக்கப்பட்டுள்ளார்.
அவரின் கை விரல் எழும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது.
டர்பனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியின் போது, தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளசிஸ்க்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் மருத்துவ சிகிச்சையின் போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கைவிரலில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் காயம் குணமாக ஏறக்குறைய 6 வாரங்கள் ஆகும் என்பதால், அதுவரை டூபளசிஸிஸ் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அடுத்து நடைபெறும் ஒரு நாள் போட்டிகள், டி20 போட்டித் தொடரில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியில் டூபிளசிஸ் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டூபிளசிஸ்க்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியில் பர்ஹான் பெஹார்டியனும், ஹெயின்ரிச் கிளாசென் கூடுதல் விக்கெட் கீப்பராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேப்டன் பொறுப்பை டுமினி ஏற்று செயல்படுவார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பெஹார்டியன், கிளாசென் இருவரும் சமீபத்தில் நடந்த உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ரன் சேர்த்ததன் காரணமாக, அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்து.
ஏற்கனவே அனுபவ வீரர் டீ வில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கு பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது.
அதுவே தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும், இப்போது மற்றொரு மூத்த வீரர் டூபிளசிஸ் காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT