Published : 20 Jan 2024 08:41 PM
Last Updated : 20 Jan 2024 08:41 PM

சொந்த மண்ணில் வெற்றிநடை - 2013 முதல் 16 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்தியா சாதனை!

கோப்புப்படம்

மும்பை: அடுத்த சில வாரங்களுக்கு இந்திய ஆடுகளங்கள் அனல் பறக்கும். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அதற்கு காரணமாக அமையும். கடந்த 2013 முதல் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீழ்ச்சி அடைந்தது இல்லை. இதுவரை 16 தொடர்களை வென்றுள்ளது. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் அதே ஆதிக்கத்தை செலுத்தி 17-வது வெற்றியை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதே இங்கிலாந்து அணியுடன் கடந்த 2012-ல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்திருந்தது இந்தியா. அதன்பிறகு 46 போட்டிகளில் விளையாடி உள்ளது. மொத்தம் 36 வெற்றிகளை பெற்றுள்ளது. அதில் 15 போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து முறை 300 ரன்கள் வித்தியாசத்திலும், 10 முறை 200 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து முறை 8+ விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2017 மற்றும் 2023, இங்கிலாந்து அணிக்கு எதிராக 2021-லும் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது. 7 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.

ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் தேச அணிகளுடன் இந்தியா விளையாடி இந்த வெற்றியை பெற்றுள்ளது. இதே ஆதிக்கத்தை இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அஸ்வின், ஜடேஜா, குல்தீப் மற்றும் அக்சர் என வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளனர். ரோகித், கோலி, யஷஸ்வி, ராகுல் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் 1994 முதல் 2000-மாவது ஆண்டு வரையிலும், 2004 முதல் 2008-ம் ஆண்டு வரையிலும் என இரண்டு முறை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை வீழ்ச்சியே காணமால் வென்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x