Published : 19 Jan 2024 04:01 AM
Last Updated : 19 Jan 2024 04:01 AM
பெங்களூரு: "இரண்டு சூப்பர் ஓவர்கள் விஷயத்தில் சரியான தகவல் சொல்லவில்லை" என்று ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களில் விளையாடி வெற்றி பெற்றது. இதில் முதல் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் தானாக வெளியேறி இருந்தார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. ஆனால், அவர் இரண்டாவது சூப்பர் ஓவரில் மீண்டும் பேட் செய்திருந்தார். அது சரியா, தவறா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்த விவாதங்களுக்கு மத்தியில், "இரண்டு சூப்பர் ஓவர்கள் விஷயத்தில் சரியான தகவல் சொல்லவில்லை" என்று ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய ஜோனாதன் ட்ராட், "ரோகித் காயத்தினால் வெளியேறினாரா அல்லது ஓய்வெடுக்க வெளியேறினாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதேபோல் இரண்டு சூப்பர் ஓவர்கள் விஷயத்தில் சரியான தகவல் சொல்லப்படவில்லை. இதற்கு முன் இரண்டு சூப்பர் ஓவர்கள் நடந்ததா?. புதிய விதிகளை ஆராய்ந்து வருகிறோம்.
மேலும், சூப்பர் ஓவர்களில் ஒருமுறை பந்துவீசிய பந்துவீச்சாளர் மீண்டும் பந்துவீச தடைசெய்யப்பட்டுள்ளது என்ற விதியையும் எங்களுக்கு சரியாக தெரிவிக்கவில்லை. இரண்டாவது சூப்பர் ஓவரில் அஸ்மத்துல்லா ஓமர்சாயை மீண்டும் பந்துவீச வைக்க விரும்பினோம். ஆனால், விதிகள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. விதிகளில் அவை இருந்தால் நல்லது. எனினும், இந்த விஷயங்கள் எதிர்காலத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கப்பட வேண்டும். மொத்தத்தில் நேற்றைய ஆட்டம் எங்கள் அணிக்கு நல்ல ஆட்டமாக அமைந்தது. மற்றபடி சூப்பர் ஓவர் விதிகள் சர்ச்சையாக இருக்க வேண்டும் என நினைக்கவில்லை." இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT