Published : 17 Jan 2024 02:39 PM
Last Updated : 17 Jan 2024 02:39 PM
அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மே.இ.தீவுகள் அணி இன்று அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் களம் கண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகள் அணி பலவீனமான அணி, மூன்று அனுபவ வீரர்கள்தான் அணியில் உள்ளனர். கேப்டன் பிராத்வெய்ட், கிமார் ரோச், மற்றும் அல்ஜாரி ஜோசப். மற்றவர்கள் புதியவர்கள், இளையவர்கள்.
முதல் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 188 ரன்களுக்குச் சுருண்டது. ஆனால், பந்துவீச்சில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அசத்திவிட்டார். தன் முதல் பந்திலேயே ஸ்மித் மட்டையின் விளிம்பை பிடித்து விட்டார். பிறகு லபுஷேனையும் பவுன்சர் உத்தியில் டீப் கேட்சுக்கு வீழ்த்த ஆஸ்திரேலியா ஆட்ட முடிவில் 59/2 என்று இருந்தது. கவாஜாவுக்கு ஒரு கேட்சை விக்கெட் கீப்பர் டாசில்வா விட்டார். அதனால் அவர் 30 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 24 வயது இளம் வீரர் ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக பாட் கமின்ஸ், ஹாசில்வுட் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மே.இ.தீவுகள் 107 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தனர். இதில் தன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இடது கை பேட்டர் கிர்க் மெக்கன்சி 94 பந்துகளில் அற்புதமான 7 பவுண்டரிகளுடன் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டிடம் ஆட்டமிழந்தார். முன்னதாக பிராத்வெய்ட் (13), தேஜ்நரைன் சந்தர்பால் (6), அலிக் அதான்சே (13), கேவம் ஹாட்ஜ் (12) ஆகியோர் கமின்ஸ் மற்றும் ஹாசில்வுட்டிடம் வெளியேறினர்.
133/9 என்று ஒரு கட்டத்தில் சரிந்த அனுபவமற்ற மே.இ.தீவுகள் கடைசியில் கிமார் ரோச் (17 நாட் அவுட்), அறிமுக வீரர் ஷமார் ஜோசப் மூலம் ஒரு அரிய 10வது விக்கெட் அரைசதக் கூட்டணியைக் கண்டது. இதில் ஷமார் ஜோசப் சில தைரியமான அதிரடி ஷாட்களை ஆடினார். 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் 41 பந்துகளில் 36 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவை கொஞ்ச நேரம் இருவரும் படுத்தி எடுத்தனர்.
தேநீர் இடைவேளை கடைசி விக்கெட்டுக்காக அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்டும் ஆஸ்திரேலிய ஜாம்பவன்களால் இந்த கடைசி ஜோடியை உடைக்க முடியவில்லை. கடைசியில் நேதன் லயன் பந்தில் ஷமார் ஜோசப் எல்.பி.ஆனார். இது கூட ‘அம்பயர்ஸ் கால்’அவுட்தான். 188 ரன்களுக்கு மே.இ.தீவுகள் முடிந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட், கமின்ஸ் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இடத்தில் தொடக்க வீரராக இறங்கினார். 2 பவுண்டரி அடித்தார். 12 ரன்களில் இருந்த போது இளம் பவுலர் ஷமார் ஜோசப் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்தில் எட்ஜ் ஆகி 3வது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். மார்னஸ் லபுஷேனும் (10) ஷமார் ஜோசப்பின் பவுன்சரை டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 59/2.
அறிமுக டெஸ்ட்டிலேயே பேட்டிங்கில் கடைசி வீரராக இறங்கி 36 ரன்களையும் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளையும் அதுவும் முதல் பந்திலேயே ஜாம்பவான் ஸ்மித்தை வீழ்த்தியும் ஷமார் ஜோசப் இன்று கிரிக்கெட் உலகின் பேசுபொருளாகியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment