Published : 17 Jan 2024 07:28 AM
Last Updated : 17 Jan 2024 07:28 AM
மெல்பர்ன்: 2024-ம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், ஜப்பானின் யோஷிடோநிஷியோ காவை எதிர்த்து விளையாடினார். இதில் ஹோல்கர் ரூன் 6-2, 4-6, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
11-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் அல்பர்ட் ரமோஸையும், 13-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 4-6, 6-3, 7-6 (7-1), 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்டன் ஃபுசோவிக்ஸையும், 19-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரி 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் பெருவின் ஜுவான் பாப்லோ வாரிலாஸையும், 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் கிரிகோயர் பாரேரையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
உலகத் தரவரிசையில் 139-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல் தனது முதல் சுற்றில் 27-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதினார். 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 6-4, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் சுமித் நாகல் 2-வது சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும்.
அதேவேளையில் கடந்த 35 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இந்திய வீரர் ஒருவர், போட்டித் தரவரிசையில் இடம் பெற்ற வீரரை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1989-ம் ஆண்டு இந்தியாவின் ரமேஷ் கிருஷ்ணன், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் முதல் நிலை வீரரான சுவீடனின் மேட்ஸ் விலான்டரை தோற்கடித்து இருந்தார்.
2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ், 7-6 (7-5), 6-1, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கெட்டையும், 6-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 4-6, 6-3, 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த டொமினிக் கோஃபரையும் வீழ்த்தினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் சோபியா கெனினுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 76 (7-2), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 11-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிர்ரெல்லையும், 14-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கஸட்கினா 6-2, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸையும், 18-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரன்கா 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியையும் வீழ்த்தி 2-வது சுற்றில் கால்பதித்தனர்.
3-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவையும், 5-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் ரெபேக்கா மரினோவையும், 12-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹெங் குயின்வென் 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஆஷ்லின் க்ரூகரையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ் ஜோடி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பேரியண்டோஸ், பிரேசிலின் ரஃபேல் மாடோஸ் ஜோடியுடன் மோதியது. 2 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, ராபின் ஹாஸ் ஜோடி 6-1, 6-7(8-10), 6-7 (7-10) என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT