Published : 11 Jan 2024 04:07 PM
Last Updated : 11 Jan 2024 04:07 PM
மொகாலி: "உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் மற்றும் கோலியின் இருப்பு அணிக்கு நிறைய உறுதியைத் தரும்" என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
3 டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையே குறுகிய வடிவிலான இருதரப்பு தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு மொகாலியில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட உள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களுக்குப் பிறகு களமிறங்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடியது போன்று பவர்ப்ளேவில் ஆக்ரோஷ அணுகுமுறையைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.
இதனிடையே, டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியைத் தேர்வு செய்தது புத்திசாலித்தனமான செயல் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "ரோகித் மற்றும் கோலியின் இருப்பு அணிக்கு நிறைய உறுதியைத் தரும். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை மைதானங்களை பார்த்தால் அங்கு விக்கெட் சற்று தந்திரமாக இருக்கும். அங்கு ரோகித் மற்றும் கோலியின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்படும். அதிலும் டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை எடுக்க உள்ளார் கோலி.
எனவே, இவர்களின் இருப்பு இந்திய அணியின் பேட்டிங்கை நிச்சயம் உயர்த்தும். மேலும் நிச்சயமாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான இந்தியாவின் வாய்ப்புகளை அதிகரிக்கும். ஒருநாள் உலகக் கோப்பையில் இருவரின் ஃபார்மும் மிகவும் நன்றாக இருந்தது. கோலி 3-வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள சவாலான ஆடுகளங்களில் கோலியின் அனுபவம் கைகொடுக்கும்" என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT