Published : 10 Jan 2024 04:36 PM
Last Updated : 10 Jan 2024 04:36 PM

“தோனிக்கு ஈடு இணை யாரும் இல்லை” - கேப்டன்சியை புகழ்ந்த பிரவீன் குமார்

‘மாஹி பாய்’ என்று சக வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தொடர் உலகக் கோப்பை சரிவுகளுக்குப் பிறகு இந்திய அணியை மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்று 3 ஐசிசி கோப்பைகளையும் பெற்றுத்தந்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர். இவரது கேப்டன்சியை சுனில் கவாஸ்கர் முதல் ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர் வரை அனைவரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

அந்தப் பட்டியலில் தற்போது பிரவீன் குமார் இணைந்துள்ளார். 2007 முதல் 2012 வரை இந்திய அணிக்கு ஆடிய ஸ்விங் பவுலர் பிரவீன் குமார் தோனி கேப்டன்சியில்தான் அதிகம் ஆடினார். தோனியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பவுலரும் கூட. புதிய பந்தில் பிரவீன் குமாரின் ஸ்விங் பந்து வீச்சு பேட்டர்களுக்கு கொஞ்சம் கடினம் தான். 68 ஒருநாள் போட்டிகளில் ஆடி 77 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடினாலும் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஏனோ இவருக்கு வாய்ப்பு தரப்படாமல் வீணடிக்கப்பட்டார்.

2008-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய வெற்றியின் முக்கியப் பங்களிப்பாளராக திகழ்ந்தார். 3 போட்டிகள் கொண்ட சிபி தொடர் இறுதிப் போட்டிகளில் 2-ல் இந்தியா வென்று தொடரை 2-0 என்று கைப்பற்றி முத்தரப்பு தொடரை இந்திய அணி முதன் முதலில் ஆஸ்திரேலிய மண்ணில் வென்றது.

இந்நிலையில், பிரவீன் குமார் யூடியூப் சேனல் ஒன்றில் தோனி கேப்டன்சி பற்றிக் கூறியது: “தோனிக்கு ஈடு இணை யாரும் இல்லை. ஒரு வீரரை எப்படி, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் தோனி ஒரு கில்லாடி. தோனி பீல்ட் செட் செய்து பவுலரை அழைத்து இப்படி வீசு என்று கூறுவார். இதுதான் ஒரு நல்ல கேப்டனுக்கு அழகு. பவுலரிடம் பந்தைக் கொடுத்து வீசு என்பார், அதாவது பவுலர் வேலை, அமைக்கப்பட்ட பீல்டிங்கைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப வீச வேண்டும்.

ஆனால் சில வேளைகளில் பவுலர்களும் சொல்ல வேண்டும். ஸ்லிப்பை எங்கு நிறுத்துவது, வழக்கமான ஸ்லிப் நிலையா அல்லது கொஞ்சம் வைடாக நிறுத்த வேண்டுமா என்பதை பவுலர்தான் சொல்ல வேண்டும். அதுதவிர தோனி களவியூகம் அமைத்து அதற்கேற்ப வீசச் சொல்வார். நாம் சொல்லும் ஆலோசனைகளையும் பரிசீலிப்பார்” என்று தோனியைப் பற்றி புகழ்ந்து பேசினார் பிரவீன் குமார்.

பிரவீன் குமார் 2017-ல் தன் கடைசி பர்ஸ்ட் கிளாஸ் போட்டியை ஆடினார். 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x