Published : 09 Jan 2024 11:33 PM
Last Updated : 09 Jan 2024 11:33 PM
நவி மும்பை: இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி. செவ்வாய்க்கிழமை நவி மும்பையில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் வென்றது. இரு அணிகளும் விளையாடிய ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்தது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றது ஆஸ்திரேலியா. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது ஆஸி.
மூன்றாவது டி20 போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. ரிச்சா கோஷ் 34, ஸ்மிருதி 29 மற்றும் ஷெபாலி 26 ரன்கள் எடுத்தனர். ஆஸி. அணி சார்பில் பந்து வீசிய அனபெல் சுதர்லாந்த் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இணைந்து 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹீலி, 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மெக்ரத் 20 ரன்களில் வெளியேறினார். எலிசி, ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 18.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது. மூனி, 52 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT