Published : 09 Jan 2024 02:02 PM
Last Updated : 09 Jan 2024 02:02 PM

ஊழல், முறைகேடுகளால் அழியும் டெல்லி கிரிக்கெட்: ரஞ்சி டிராபியில் புதுச்சேரியிடம் அதிர்ச்சித் தோல்வி

டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (DDCA) ஊழல்கள், முறைகேடுகள், நிதி முறைகேடுகள், மோசமான மேலாண்மை போன்றவற்றுடன் சிபாரிசின் பேரில் அணித் தேர்வும், செல்வாக்கு மிக்கவர்களின் வாரிசுகளுக்கு பதவியும், அணியில் இடமும் கொடுக்கப்படும் படுமட்டமான நிர்வாகம் டெல்லி கிரிக்கெட்டை அழித்து வருகிறது என்பது பலரும் அறிந்த கதை. ஆனால் முத்தாய்ப்பாக அது கிரிக்கெட் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதன் வெளிப்படையான நிகழ்வுதான் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் புதுச்சேரி அணியிடம் டெல்லி படுதோல்வி கண்டது.

2015-ம் ஆண்டு மறைந்த இந்திய முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் இடது கை ஸ்பின்னருமான பிஷன் சிங் பேடி மற்றும் 1983 உலகக் கோப்பையை வென்ற கபில்ஸ் டெவில்ஸ் அணி வீரருமான கீர்த்தி ஆசாத்தும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி அரசு விசாரணைக் கமிட்டி ஒன்றை அமைத்ததை பலரும் மறந்திருக்கலாம். ஆனால் புகாரின் முக்கிய அம்சமே ஊழல், சிபாரிசு, செல்வாக்கு மிக்கவர்கள் செலுத்தும் முறையற்ற ஆதிக்கம் என்பதுதான். பிஷன் சிங் பேடி டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடமே புகார் கொடுத்ததும் நடந்தது.

குறிப்பாக அப்போது மோடி அரசின் நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லியை உள்ளடக்கியும் பிஷன் பேடி புகார் அளித்தது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும். இதெல்லாம் எதற்கு நினைவுகூரப்படுகிறது எனில், டெல்லி கிரிக்கெட் சங்கம் ஊழலில் ஊறிப்போன ஒரு சங்கம். இப்போது புதுச்சேரியிடம் ரஞ்சியில் படுதோல்வி அடைந்ததால்தான் அதுவும் டெல்லி அணி தங்கள் சொந்த மண்ணில் தோல்வி கண்டுள்ளதை அடுத்து இந்த புகார்கள் மீண்டும் டெல்லி கிரிக்கெட்டை வட்டமடித்து வருகின்றன.

இதனாலேயே டெல்லி டிஸ்ட்ரிக்ட் சங்கம் என்பது டெல்லி டாடீஸ் கிரிக்கெட் சங்கம் என்றும் டெல்லி டிஸ்ட்ரிக்ட்ஸ் குரூக்ஸ் அசோசியேஷன் என்றும் கேலிப்பொருளாக கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்தது. இன்று உலகின் நம்பர் 1 வீரராகத் திகழும் விராட் கோலியை தேர்வு செய்வதற்கே அவரது தந்தையிடம் ‘சம்திங்’ கேட்ட சங்கம் டெல்லி கிரிக்கெட் சங்கம் என்பதை விராட் கோலியே பல நேர்காணல்களில் தெரிவித்ததையும் நாம் அறிவோம்.

டெல்லி கிரிக்கெட் சங்கம் மட்டுமல்ல, வேறு சில கிரிக்கெட் சங்கங்களிலும் முறைகேடுகள் இருக்கவே செய்கின்றன என்பதுதான் இது குறித்து நோக்கும் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் டெல்லி அணி புதுச்சேரியிடம் தோல்வி அடைந்தது, டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தையே ஒட்டுமொத்தமாக கலைக்க வேண்டிய குரல்களை எழுப்பி வருகிறது. ஆனால் புதுச்சேரியைக் காரணம் காட்டி தோல்வியடைந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய யு-19 உலகக் கோப்பை வெற்றி கேப்டன் யாஷ் துல் கேப்டன் பதவியை பறித்துள்ளனர்.

நேற்று முடிந்த ரஞ்சி டிராபி எலைட் டி பிரிவு போட்டியின் ஸ்கோர்: முதலில் பேட் செய்த டெல்லி அணி 148 ரன்களுக்குச் சுருண்டது. மத்தியப் பிரதேசத்திலிருந்து புதுச்சேரிக்கு ஆடும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் கௌரவ் யாதவ் 26.5 ஓவர்களில் வெறும் 49 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 244 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் பராத் ரத்னபார்க்கே என்ற வீரர் அதிகபட்சமாக 60 ரன்களை எடுத்தார். டெஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டைக் கைப்பற்றினார் என்பதல்ல விஷயம். அவர் பந்து வீச்சிலும் எந்த தாக்கமும் இல்லை. நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 96 ரன்கள் பின்னிலையில் இறங்கிய டெல்லி 2வது இன்னிங்சில் 145 ரன்களுக்குச் சுருண்டது. இந்த முறையும் ம.பி. வேகப்பந்து வீச்சாளர் கவுரவ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்தினார். 50 ரன்கள் வெற்றி இலக்கை புதுச்சேரி 14வது ஓவரில் எட்டி அரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மூலம் எலைட் குரூப் டி அட்டவணையில் புதுச்சேரி அணி 6 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8வது இடத்தில் உள்ளது.

புதுச்சேரி வேகப்பந்து வீச்சு என்பது சாதாரண மீடியம் வேகம்தான். இந்த வேகத்தைக் கூட ஆட முடியாத வீரர்கள் டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு 2011 யு-19 உலகக் கோப்பையை வென்ற யாஷ் துல் என்ற எதிர்கால இந்திய நட்சத்திர வீரராகும் வாய்ப்புள்ளவரின் கிரிக்கெட் எதிர்காலமும் பாழடிக்கப்படலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. ஒன்று டெல்லி கிரிக்கெட் சங்கம் சீரமைக்கப்பட வேண்டும். இல்லையேல் அங்கு வாய்ப்பு கிடைக்காத நல்ல வீரர்கள் வேறு மாநில அணிகளுக்கு ஆட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x