Published : 09 Jan 2024 07:02 AM
Last Updated : 09 Jan 2024 07:02 AM
வல்சாத்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக அணியை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி.
குஜராத் மாநிலம் வல்சாத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் குஜராத் 236 ரன்களும், தமிழகம் 250 ரன்களும் எடுத்தன. 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய குஜராத் அணி 2-வது இன்னிங்ஸில் 84 ஓவர்களில் 312 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக உமாங் குமார் 89 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து 299 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணி 3-வது நாள் ஆட்டத்தில் 15 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 18, கேப்டன் சாய் கிஷோர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 81.2 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாய் சுதர்சன் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் கஜா பந்தில் வெளியேறினார்.
சாய் கிஷோர் 48, பாபா இந்திரஜித் 39, விஜய் சங்கர் 16, நாராயண் ஜெகதீசன் 9, முகமது 4, சந்தீப் வாரியர் 1, திரிலோக் நாக் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரதோஷ் ரஞ்சன் பால் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணி சார்பில் அர்சான் நக்வாஸ்வாலா 4, சின்தன் கஜா 3, பிரியஜித் ஜடேஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத்அணி முழுமையாக 6 புள்ளிகளை பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT