Published : 05 Jan 2024 05:42 AM
Last Updated : 05 Jan 2024 05:42 AM

SA vs IND | கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

டெஸ்ட் தொடருக்கான கோப்பையை பகிர்ந்து கொண்ட இரு அணிகளின் கேப்டன்கள்.

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.

கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கைல் வெர்ரைன் (15), டேவிட் பெடிங்ஹாம் (12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், ஜஸ்பிரீத் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 39, ஷுப்மன் கில் 36, விராட் கோலி 46 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா, நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்தது. எய்டன் மார்க்ரம் 36, டேவிட் பெடிங்ஹாம் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தில் ஆட்டம் கண்டது.

பெடிங்ஹாம் 11, கைல் வெர்ரைன் 9, மார்கோ யான்சன் 11, கேசவ் மகாராஜ் 3 ரன்களில் பும்ரா பந்தில் நடையை கட்டினர். ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் தாக்குதல் ஆட்டம் தொடுத்து தனது 7-வது சதத்தை விளாசிய எய்டன் மார்க்ரம் 103 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசிய நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து காகிசோ ரபாடா 2 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்திலும், லுங்கி நிகிடி 8 ரன்களில் பும்ரா பந்திலும் வெளியேற 36.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 6 விக்கெட்களையும், முகேஷ்குமார் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

79 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆசிய கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது இந்திய அணி.

ரோஹித் சர்மா 22 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 23 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் நந்த்ரே பர்கர் பந்திலும், ஷுப்மன் கில் 10 ரன்களில் ரபாடா பந்திலும், விராட் கோலி 12 ரன்களில் மார்கோ யான்சன் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என சமனில் முடித்தது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

குறைவான பந்துகளில்.. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி நான்கரை செஷன்களில் முடிவடைந்தன. இந்த ஆட்டத்தில் மொத்தம் 642 பந்துகளே வீசப்பட்டது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் முடிவடைந்த போட்டியாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 1932-ம் ஆண்டு ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மெல்பர்ன் நகரில் மோதிய ஆட்டத்தில் 656 பந்துகள் வீசப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x