Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM

இலங்கை-பாக். 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டியோடு இலங்கையின் முன்னணி பேட்ஸ்மேனான ஜெயவர்த்தனா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதால் இந்த போட்டியில் வென்று அவருக்கு பிரம்மாண்ட பிரியா விடைகொடுப்பதில் இலங்கை அணி தீவிரமாக உள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் குமார் சங்ககாரா, ஜெயவர்த்தனா, கேப்டன் மேத்யூஸ் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் உடற்தகுதி பிரச்சினை காரணமாக 3 மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் வேகப்பந்து வீச்சாளர் எரங்கா விளையாடுவது சந்தேகமே. அவருக்குப் பதிலாக வெலகெதரா இடம்பெறுவார் என தெரிகிறது. கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ள விதாஞ்ஜே, உடற்தகுதிபெறாத பட்சத்தில் திரிமானியும், உபுல்தரங்காவுக்குப் பதிலாக திமுத் கருணாரத்னேவும் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் 5 நாள்களும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவதுதான் பிரச்சினையே. கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 450 ரன்களுக்கு மேல் குவித்த பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள்ளாகவே சுருண்டது. மூத்த வீரரான யூனிஸ்கான், கேப்டன் மிஸ்பா உல் ஹக், அசார் அலி, சர்ஃப்ராஸ் அஹமது ஆகியோர் அந்த அணியின் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றாலும், தொடக்க ஆட்டக்காரர் குர்ரம் மன்சூருக்குப் பதிலாக ஷான் மசூத் இடம்பெறலாம் என தெரிகிறது.

பாகிஸ்தான் ஆடும் லெவனில் ஷான் மசூத், அஹமது ஷெஸாத், அசார் அலி, யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக், ஆசாத் ஷபிக், சர்ஃப்ராஸ் அஹமது, அப்துர் ரெஹ்மான், முகமது தல்ஹா, சயீத் அஜ்மல், ஜுனைத் கான் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய போராடும். ஆனால் இலங்கை அணியோ ஜெயவர்த்தனாவை வெற்றியோடு வழியனுப்ப முயற்சிக்கும் என்பதால் இலங்கை ரசிகர்களுக்கு இந்தப் போட்டி மறக்க முடியாத போட்டியாக அமையும்.

ஜெயவர்த்தனாவுக்கு பிரியா விடை

இலங்கை அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மஹேல ஜெயவர்த்தனா இந்த போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார். 1997-ல் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட ஜெயவர்த்தனாவின் 17 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கை, அதே கொழும்பு மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டியோடு முடிவுக்கு வருகிறது.

இலங்கை அணியில் ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, ரணதுங்கா போன்றோர் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களின் இடத்தை நிரப்பியதோடு, அந்த அணியின் ரன் குவிப்பில் முக்கிய பங்காற்றிய ஜெயவர்த்தனா, ஏராளமான போட்டிகளில் சிறப்பாக ஆடி இலங்கைக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். கேப்டனாகவும் அந்த அணியை திறம்பட வழிநடத்தியுள்ளார்.

ஆசிய மண்ணில் எதிரணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்ந்த ஜெயவர்த்தனாவுக்கு கொழும்பு மைதானம் மிக ராசியான மைதானம் ஆகும். இங்கு 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 11 சதங்களை விளாசியுள்ளார். அதனால் தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் (149-வது போட்டி) அவர் சதமடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை ரசிகர்கள் உள்ளனர். அவர் இந்த போட்டியில் 137 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் கொழும்பு மைதானத்தில் 3,000 ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை 148 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெயவர்த்தனா 34 சதம், 49 அரைசதம் உள்பட 11,756 ரன்கள் குவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x