Published : 02 Jan 2024 05:12 PM
Last Updated : 02 Jan 2024 05:12 PM
சிட்னி: தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணாமல் போயிருக்கிறது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு வேறு வழியில்லை என்பதால் கடைசி முயற்சியாக இந்த வீடியோவை பதிவிடுகிறேன். எனது பச்சை நிற தொப்பி எனது லக்கேஜில் இருந்து காணாமல் போயுள்ளது. சில தினங்களுக்கு முன் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து சிட்னிக்கு எனது லக்கேஜ் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது காணாமல் போயிருக்கலாம்.
கேமராவில் செக் செய்து பார்த்தபோது போதுமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. எனது தொப்பியை யாராவது எடுத்திருந்தால் தயவு செய்து கொடுத்து விடுங்கள். நான் எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. என்னிடம் மற்றொரு பேக் உள்ளது. அதனை உங்களுக்குப் பரிசாக கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய தொப்பியை மட்டும் கொடுத்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஐசிசி வழங்கும் அவர்களின் தொப்பி மதிப்புமிக்கதாக கருதப்படும். அதுவும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியால் வழங்கப்படும் பச்சை நிறத் தொப்பியை மிகப் பெரும் கௌரவமாக கருதுவார்கள். அந்தவகையில் வார்னரும் காணாமல் போன தனது பச்சை நிற தொப்பியை கண்டுபிடிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு: ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் டேவிட் வார்னர். ஏற்கெனவே பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரே தான் பங்கேற்று விளையாடும் கடைசி டெஸ்ட் தொடர் என அவர் அறிவித்திருந்தார்.
தற்போது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி போட்டி புதன்கிழமை அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியே வார்னர் பங்கேற்று விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி. 37 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,695 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2009 முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வார்னர் விளையாடி வருகிறார். இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் 6,932 ரன்கள் எடுத்துள்ளார். 2015 மற்றும் 2023 உலகக் கோப்பை தொடரை வென்ற அணியில் வார்னர் இடம்பெற்றிருந்தார். நடப்பு ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அணிக்கு தேவைப்பட்டால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவும் தான் தயார் என தெரிவித்துள்ளார்.
ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாகவும், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணிக்கு தேவை இருந்தால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT