Published : 02 Jan 2024 07:10 AM
Last Updated : 02 Jan 2024 07:10 AM

“இந்தியா உள்ளிட்ட நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டும்” - ஸ்டீவ் வாஹ்

சிட்னி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி மாதம் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 7 பேர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். இதுவரை சர்வதேச போட்டிகளில் களமிறங்காத நெய்ல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் நடைபெற உள்ள எஸ்ஏ டி20 லீக்கில் விளையாட உள்ளனர். இந்த தொடரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து ஐபிஎல் முதலீட்டாளர்கள் நடத்துகின்றனர். இந்த தொடர் நடைபெறும் நேரத்தில் நியூஸிலாந்து சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இதனால் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கு 2-ம் தர வீரர்களை உள்ளடக்கிய அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

மேலும் எஸ்ஏ 20 லீக்குடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்ற விதியையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளது. இதுவும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர்கள் இடம் பெறாததற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலை கடுமையாக சாடியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாஹ். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கவலைப்படவில்லை. நான் நியூஸிலாந்து அணியில் இருந்தால் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டேன். அவர்கள் ஏன்? விளையாடுகிறார்கள் எனத் தெரியவில்லை. இது டெஸ்ட் கிரிக்கெட் அழிவுக்கான தருணமாக இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முக்கிய வாரியங்கள் ஐசிசியுடன் சேர்ந்து கிரிக்கெட்டின் தூய்மையான வடிவத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும். லாபங்களை மட்டும் வரையறுக்கும் அளவு கோலாக நின்று நாம் அனுமதித்தால், டான் பிராட்மேன், டபிள்யூ.ஜி.கிரேஸ், சோபர்ஸ் போன்றவர்களின் மரபு நியாயமற்றதாகி விடும். இவ்வாறு ஸ்டீவ் வாஹ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x