Published : 31 Dec 2023 07:42 AM
Last Updated : 31 Dec 2023 07:42 AM
புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யூஎஃப்ஐ) தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதைக் கண்டித்து, மத்திய அரசு தனக்கு அளித்தகேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வீராங்கனை வினேஷ் போகத்திருப்பியளித்தார். இந்த விருதுகளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக சென்றபோது போலீஸார் அவரைத் தடுத்தனர். இதையடுத்து டெல்லி கடமைப் பாதையிலேயே விருதுகளை வைத்து விட்டு அவர் திரும்பினார்.
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாஜக எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தியதையடுத்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக வீராங்கனை சாக்சி மாலிக்கும், மத்திய அரசின் விருதுகளை திருப்பியளிப்பதாக மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் பூனியா, வீரேந்தர் சிங் ஆகியோரும் அறிவித்தனர்.
பிரதமருக்கு கடிதம்: இந்நிலையில் தான் பெற்ற மத்திய அரசு விருதுகளை திருப்பி அளிப்பதாக உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத்தும் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் வினேஷ் போகத் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் விருதுகளை திருப்பியளிப்பதற்காக டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் நோக்கி சென்றார். ஆனால் செல்லும் வழியில் போலீஸார் அவரைத் தடுத்ததால், டெல்லி கடமைப் பாதையிலேயே (கர்த்தவ்யா பாத்) கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வைத்துவிட்டுத் திரும்பினார். பின்னர் அந்த விருதுகளை டெல்லி போலீஸார் எடுத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT