Published : 27 Jan 2018 06:36 PM
Last Updated : 27 Jan 2018 06:36 PM
ஐபிஎல் ஏலத்தின் தர்க்கமே விசித்திரமாக உள்ளது. ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் பிரமாதமாக வீசிய பெரிய இன்ஸ்விங் பவுலரான விதர்பாவின் ரஜ்னீஷ் குர்பானியை (24) இன்று ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகவும் முன் வரவில்லை.
விதர்பா அணிக்காக மிகச்சிறந்த ரஞ்சி சீசனை ஆடினார் ரஜ்னீஷ் குர்பானி. வருங்கால இந்திய அணியின் நட்சத்திர பவுலராக கிரிகெட் ஆர்வலர்களால் கருதப்படுபவர் குர்பானி.
ரஞ்சி காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்றவர். கர்நாடகா அணிக்கு எதிராக மிகவும் முக்கியக் கட்டத்தில் பெரிய இன்ஸ்விங்கர்களினால் விதர்பாவுக்கு வெற்றி தேடித் தந்தவர்.
அரிய ரஞ்சியில் டெல்லி அணிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தவர், ரஞ்சி டிராபியிலேயே ஊறி விளையாடும் பெரிய பேட்ஸ்மென்களை தன் இன்ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர் மற்றும் இன்ஸ்விங்கிங் யார்க்கர்களால் கடும் சிரமத்துக்குள்ளாக்கி வீழ்த்தியவர். இன்னொரு புவனேஷ்வர் குமார், இன்னொரு மனோஜ் பிரபாகர் என்று விதந்தோதப்படுபவர் ரஜ்னீஷ் குர்பானி.
இவரது ஐபிஎல் அடிப்படை விலை வெறும் ரூ.20 லட்சம்தான். ஆனால் அவரை ஏலம் எடுக்க எந்த அணி உரிமையாளரும் முன்வரவில்லை. இது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இதுவரை 10 முதல்தரப் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை 19.28 என்ற சராசரியுடன் 3.03 என்ற சிக்கன விகிதத்துடனும் 38 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார் குர்பானி. ஆனால் இவர் ஐபிஎல் அணிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT