Published : 30 Dec 2023 02:36 PM
Last Updated : 30 Dec 2023 02:36 PM

மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 அணி... ஆனாலும் தென் ஆப்பிரிக்காவில் சொதப்பல் - எங்கு தவறு?

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 34 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 150 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது, பிசிசிஐ-யின் செயல்பாடுகள் குறித்த கடும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. உண்மையில் இந்திய அணி நம்பர் 1-ஆ என்ற கேள்வியை பிசிசிஐ கேட்டுக் கொள்ள வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரையே வெல்ல முடியவில்லை என்பதோடு படுமோசமான தோல்விகளை அங்குதான் சந்தித்து வருகிறது என்று வரலாறு இருக்கும் போது திட்டமிடல் இல்லாமல் ஏதோ கச்சேரிக்கோ, பிக்னிக்கிற்கோ செல்வது போல் சென்றால் இப்படித்தான் தோல்வியில் போய் முடியும் என்று தெரியாதவர்களா பிசிசிஐ-யில் டாப் பதவிகளில் இருக்கின்றனர். 2024 ஆஸ்திரேலியா தொடருக்கு முன் பிசிசிஐ விழித்துக் கொள்ளவில்லை எனில் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை, களங்களை, போட்டி ஆடப்படும் விதங்களை மாற்றி வடிவமைக்கவில்லை எனில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் இனி மெல்ல சாகும் என்பதையே நாம் உறுதியாகக் கூற முடியும்.

தென் ஆப்பிரிக்கா தொடரின் 2வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெறுகிறது. அந்த டெஸ்ட் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா தொடருக்கான தயாரிப்பில் ஈடுபடுவது நல்லது. இல்லையெனில் ஆஸ்திரேலியா 2 டெஸ்ட் தொடர்களின் தோல்விக்கு கடுமையாக பழிதீர்த்துக் கொள்வதோடு இந்திய அணியின் மேம்போக்குகளை தோலுரித்து அம்பலப்படுத்துவதே நடக்கும்.

ரோகித் சர்மா கேப்டன்சி தோனி போல் உள்ளதாக அனைவரும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை வைத்து அறுதியிட்டு புகழ்பாடினர். ஆனால் டெஸ்ட் போட்டிகளிலும் தோனி போல் போதாமையான கேப்டன்சியைத்தான் ரோகித் சர்மா மேற்கொண்டார். எப்படி லார்ட்ஸ் கிரீன் டாப் பிட்சில் உணவு இடைவேளைக்குப் பிறகு ரெய்னாவிடம் பந்தைக் கொடுத்தாரோ தோனி அதேபோல் அன்று செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணாவைக் கொண்டு வந்தார். இது சொதப்பலின் உச்சக்கட்டம்.

பிட்சில் நல்ல ஸ்விங்கிற்கு வாய்ப்பு இருந்தும் இருவரும் சொதப்பலாக வீசினர். காரணம் ரோகித் சர்மாவிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. ரவி சாஸ்திரி- கோலி காம்பினேஷனில் இருந்த பயிற்சியாளர் குழு மிகவும் கண்டிப்பான ஒரு குழு. இப்போது இருக்கும் திராவிட்-ரோகித் கூட்டணி பயிற்சியாளர்கள் குழுவுக்கு திட்டமிடல் இல்லை என்பது வேதனை.

அஸ்வினை உட்கார வைத்து உட்கார வைத்து அவரது டெஸ்ட் பந்து வீச்சும் காலியாகிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் குழிப்பிட்சைப் போட்டு ஆடி ஆடி வென்று, அதில் 3 நாட்களுக்குள் எதிரணிகளை வீழ்த்தி நம்பர் 1 என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் போக்கை நிறுத்தி ஒரு பிட்சையாவது கிரீன் டாப் பிட்ச்களை அமைக்க வேண்டும். கிரீன் டாப் இல்லாவிட்டாலும் ரஞ்சி டிராபி பிட்ச்களை சீர்த்திருத்தம் செய்து உண்மையான பிட்ச்களாக பவுலிங், பேட்டிங் இரண்டும் சம பலத்துடன் மோதுவதாக அமைக்க வேண்டும்.

முதலில் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து டெஸ்ட் வீரர்கள் ஓய்வு பெற வேண்டும். ஏனெனில் அது வீரர்களின் மனம், உடல், அணுகுமுறை ஆகியவற்றை மாற்றி விடுகிறது. அஸ்வின் வீசுவதைப் பார்த்தால் முடியாமல் வீசுவது போல் உள்ளது. ஜடேஜா பவுலிங்கும் காலியாகி வருகிறது. இப்படியே போனால் இங்கிலாந்து இங்கு வந்து 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் போது அவர்களின் ‘பாஸ்பால்’ அதிரடியில் பாகிஸ்தான் சிக்கி சின்னாபின்னமாவது போல் இந்திய அணியும் ஆகிவிடும் என்ற எச்சரிக்கைத் தேவை.

ஷுப்மன் கில்லை தூக்கி விட்டு சர்பராஸ் கானை கொண்டு வர வேண்டும். வெளிநாட்டுத் தொடர்களில் அந்நாட்டு சிறந்த உள் அணியிடம் முதல் தர கிரிக்கெட்டைத்தான் ஆட வேண்டும். பயிற்சி ஆட்டம் என்று பிரதமர் லெவன், பிரசிடெண்ட் லெவன் போன்ற ஸ்கூல் சிறுவர்களுடன் ஆடி அதைப் பயிற்சி என்று சொல்லக் கூடாது. மேலும் நம் அணிக்குள்ளேயே பிரித்துப் போட்டு மேட்ச் ஆடுவதை, அதாவது இண்ட்ரா ஸ்குவாட் போட்டி நடத்துவதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கவாஸ்கர் சொல்வது போல் இண்ட்ரா ஸ்குவாட் மேட்ச் எல்லாம் பெரிய ஜோக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x