Published : 28 Dec 2023 05:50 AM
Last Updated : 28 Dec 2023 05:50 AM
செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்குஆட்டமிழந்தது.
செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 5, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, ஷுப்மன் கில் 2, ஸ்ரேயஸ் ஐயர் 31, விராட் கோலி 38, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, ஷர்துல் தாக்குர் 2, ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
கே.எல்.ராகுல் 70, முகமது சிராஜ் 0 ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்காமல்இருந்தனர். இவர்கள் இருவரும் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள். ரபாடா வீசிய 65 ஓவரின் கடைசி பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையை நோக்கி சிக்ஸர் விளாசினார் கே.எல்.ராகுல்.மறுமுனையில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய முகமது சிராஜ் 22 பந்துகளில், 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜெரால்டு கோட்ஸி வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் கைல்வெர்ரைனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
ஜெரால்டு கோட்ஸி வீசிய இதே ஓவரின் கடைசி பந்தை கே.எல்.ராகுல், டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த சதத்தை அவர், 133 பந்துகளில், 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் கடந்தார். அபாரமாக விளையாடிய கே.எல்.ராகுல் 137 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தநிலையில் நந்த்ரே பர்கர் பந்தில் போல்டானார். முடிவில் இந்திய அணி 67.4 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, நந்த்ரே பர்கர் 3 விக்கெட்களையும் மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து தென்ஆப்பிரிக்க அணி பேட் செய்தது. தொடக்கவீரரான எய்டன் மார்க் ரம் 5 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.இதைத் தொடர்ந்து களமிறங்கிய டோனி டி ஜோர்ஸி 28, கீகன் பீட்டர்சன் 2 ரன்களில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் வெளியேறினர்.
113 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய டேவிட் பெடிங்ஹாமுடன் இணைந்து டீன் எல்கர் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இந்திய பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொண்ட டீன் எல்கர் 140 பந்துகளில், 19 பவுண்டரிகளுடன் தனது 14-வது சதத்தை விளாசினார். பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் ஆகியோரது பந்து வீச்சில் சிக்ஸர் விளாசிய டேவிட் பெடிங்ஹாம் 80 பந்துகளில் தனது முதல் அரை சதத்தை கடந்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
சிறப்பாக விளையாடி வந்த டேவிட் பெடிங்ஹாம் 56 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் போல்டானார். 4-வது விக்கெட்டுக்கு டீன் எல்கருடன் இணைந்து டேவிட் பெடிங்ஹாம் 131 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன்,சிராஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்ட தென் ஆப்பிரிக்க அணி 61-வது ஓவரில் 245 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.
கைல் வெர்ரைன் 4 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்மிழந்தார். 66 ஓவர்கள்வீசப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க அணி5 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்களுடனும், மார்கோ யான்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT