Published : 17 Jan 2018 04:45 PM
Last Updated : 17 Jan 2018 04:45 PM
அணி தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில் தனது தனிப்பட்ட சாதனைகள் முக்கியமல்ல என்று விராட் கோலி பேசியுள்ளார்.
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றுவந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. இந்தத் தோல்வியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தொடரையும் வென்றது.
இந்தத் தோல்வி குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, "களம் மிகவும் தட்டையாக இருந்ததாக நினைத்தோம். ஆச்சரியமாக இருந்தது. நிறைய ரன்கள் சேர்க்க எங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாகவே நினைத்தோம். அதிலும் தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகள் இழந்த விதத்தை பார்த்த போது எங்களுக்கு சாதகம் இருப்பதாகவே தோன்றியது. நாங்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருக்க வேண்டும்.
பார்ட்னர்ஷிப்பில் ரன்கள் சேர்க்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எங்கள் பவுலர்கள் அவர்களது வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள். மீண்டும் பேட்ஸ்மேன்கள் தான் அணியை கைவிட்டு விட்டனர். நான் அடித்த 150 ரன்கள் இப்போது முக்கியமல்ல ஏனென்றால் ஆட்டத்தையும், தொடரையும் இழந்துவிட்டோம். ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை எனவே தனிப்பட்ட சாதனைகள் பெரிதல்ல. வெற்றி பெறும்போது 30-50 ரன்கள் அடித்திருந்தாலும் அது எனக்குப் பெரிதாகத் தெரியும்.
களத்துக்கு செல்கிறோம், சிறப்பான ஆட்டத்தை தர நினைக்கிறோம். ஆனால் அது போதவில்லை. தென்னாப்பிரிக்கா எங்களை விட சிறப்பாக ஆடியது. முக்கியமாக ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது" என்று பேசியுள்ளார்.
2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியா எந்த டெஸ்ட் தொடரையும் இழந்திருக்கவில்லை. மொத்தம் 9 தொடரை கைப்பற்றியிருந்தது. இந்தத் தோல்வியின் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றி ஓட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT