Published : 26 Dec 2023 06:34 AM
Last Updated : 26 Dec 2023 06:34 AM
மெல்பர்ன்: பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்பர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் இப்போட்டி தொடங்குவதால் இது பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
டேவிட் வார்னர் அபாரம்: முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தியிருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் குவித்தார். அதைப் போல உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.
மேலும் பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், கேப்டன் பாட் கம்மின்ஸ், நேதன் லயன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் முதல் டெஸ்டில் ஜொலித்தனர். எனவே, 2-வது டெஸ்ட் போட்டியிலும் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்வதற்கான பணிகளுக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆயத்தமாகி உள்னர்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டியின்போது பேட்டிங்கில் பிரகாசிக்கவில்லை. இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக் ஆகியோர் மட்டுமே முதல் இன்னிங்ஸில் சுமாராக விளையாடினர். மற்றஅனைவரும் எளிதில் ஆட்டமிழந்தது அந்த அணியின் தோல்விக்குக் காரணமாகி விட்டது.
எனவே, பாகிஸ்தானின் பேட்டிங் துறை வலுவடைந்தால் மட்டுமே, ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளிக்க முடியும் என்ற நிலைமை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment