Published : 25 Dec 2023 10:30 PM
Last Updated : 25 Dec 2023 10:30 PM
செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர் எனும் சாதனையை எட்டும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இந்த சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த பயணத்தில் டி20 தொடர் சமனிலும், ஒருநாள் தொடரை இந்திய அணியும் வென்றுள்ளது. இந்நிலையில், இரண்டு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரை இந்தியா வென்றால் அது வரலாற்று சாதனையாக அமையும். அதே நேரத்தில் இந்த தொடரில் 11 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தினால் 500 விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.
இந்த சாதனையை படைப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500+ விக்கெட்களை வீழ்த்திய ஒன்பதாவது பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைப்பார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, லயன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான அஸ்வின், கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அதோடு 3,129 ரன்களை பதிவு செய்துள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பவுலராகவும், ஆல்ரவுண்டர்களில் 2-வது இடத்திலும் அஸ்வின் உள்ளார். வெளிநாட்டு தொடரான இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் ஆடும் லெவனில் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தென் ஆப்பிரிக்க நாட்டில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT