Published : 21 Jan 2018 08:37 AM
Last Updated : 21 Jan 2018 08:37 AM
கோவையில் நேற்று நடைபெற்ற ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் கோகுலம் கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி அணியை வென்றது.
தேசிய அளவிலான இந்த கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தமிழக அணியான சென்னை சிட்டி கிளப் அணி ஏற்கெனவே நடைபெற்ற 10 ஆட்டங்களின் மூலம் 9 புள்ளிகள் பெற்று, 8-ம் இடத்தில் உள்ளது. இதனால் தொடர்ந்து வெற்றிகளை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள சென்னை சிட்டி அணி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில், கோகுலம் கேரளா கிளப் அணியை எதிர்கொண்டது.
முதல் பாதி ஆட்டத்தில் சென்னை சிட்டி அணிக்கு கோல் போட பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தும், வாய்ப்புகளைத் தவறவிட்டது. இடைவேளையின்போது இரு அணிகளும் கோல் எதுவும் போடாமல், சம நிலையில் இருந்தன. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருந்தது. உள்ளூர் மைதானம் என்பதால் சென்னை சிட்டி அணிக்கு அதிக ஆதரவு இருந்தது. ஏராளமான இளைஞர்கள் மைதானத்தில் திரண்டு சென்னை சிட்டி அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
59-வது நிமிடத்தில் கேரள அணி வீரர் கிவி ஹிமாமி கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலைப் பெற்றது. இதையடுத்து பதில் கோல் அடிக்க சென்னை அணி வீரர்கள் பெரிதும் முயன்றனர். அதேவேளையில் கேரள அணி வீரர்களும் துடிப்பாக செயல்பட்டனர். இன்சுரி நேரமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும் இரு அணிகள் தரப்பில் மேலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் கோகுலம் கேரளா கிளப் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் சந்து சிங் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ‘தி இந்து’ குழும இயக்குநர்களில் ஒருவரும், சென்னை சிட்டி கிளப் அணி உரிமையாளருமான ரோஹித் ரமேஷ் பரிசு வழங்கினார்.
கோவை நேரு விளையாட்டு அரங்கில் சென்னை சிட்டி கிளப் அணி தனது அடுத்த ஆட்டத்தை வரும் 27-ம் தேதி விளையாடுகிறது. மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டெல்லி இந்தியன் ஏரோஸ் கிளப் அணியை சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT