Published : 24 Dec 2023 11:47 PM
Last Updated : 24 Dec 2023 11:47 PM

பாகிஸ்தானுக்கே உரிய வேகப்பந்து வீச்சு எங்கே போனது? - வக்கார் யூனிஸ் கவலை

26-ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கும் நிலையில் பெர்த் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு விடிமோட்சம் ஏது? வெற்றி பெறும் வாய்ப்பு உண்டா, வேகப்பந்து வீச்சு என்ன ஆனது என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

பெர்த்தில் நல்ல வேகப்பந்து சாதக ஆட்டக்களத்தில் பாகிஸ்தானின் முன்னணி பவுலர் ஷாஹின் ஷா அஃப்ரீடி 130 கி.மீ வேகத்தை எட்ட திணறினார். குரம் ஷேசாத், ஆமிர் ஜமால், ஃபாஹிம் அஷ்ரப் போன்றோர் 140 கி.மீ வேகத்தை எப்போதாவது எட்டினர். பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியைத் தழுவியது. 2வது இன்னிங்சில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோற்றதும் பாகிஸ்தான் அணியைப் பற்றிய கவலையை வக்கார் யூனிஸுக்கு அதிகரிக்கச் செய்துள்ளது.

இப்போது மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு ஹசன் அலி, முகமது வாசிம் ஜுனியர், அல்லது மிர் ஹம்சா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இடம்பெற வாய்ப்புள்ளது. இதில் மிர் ஹம்சா இடது கை வேகப்பந்து வீச்சாளர். ஆனால் வக்கார் யூனிஸுக்குத் திருப்தி இல்லை.

“ஆஸ்திரேலியா என்றாலே நமக்கு பெருகும் உற்சாகம் வேகப்பந்து வீச்சுதான். ஆனால் பாகிஸ்தான் பந்து வீச்சில் நான் அதை இன்னும் பார்க்கவில்லை. மீடியம் வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்லோ மீடியம் பவுலர்கள், ஆல்ரவுண்டர்கள் ஆகியோர்களைத்தான் நான் பார்க்கிறேன். உண்மையான வேகப்பந்து வீச்சு இல்லை. பாகிஸ்தான் பவுலர்கள் ஓடி வந்து 150 கிமீ வேகம் வீசுவதைப் பார்க்கத்தான் மக்கள் விரும்புவார்கள். இப்போது அந்த வேகம் இல்லை.

இது ஏன் கவலை அளிக்கிறது எனில், பாகிஸ்தான் உள்நாட்டில் கூட வேகப்பந்து வீச்சில் 150 கி.மீ வேகம் வீசுபவர்கள் இல்லை. சிலர் காயமடைந்துள்ளனர். கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா பயணத்திற்கு சிறந்த வேகப்பந்து வீச்சுடன் தான் வருவார்கள். இப்போது அது இல்லை இதுதான் எனக்கு கவலை அளிக்கின்றது.

ஷாஹின் அஃப்ரீடியிடம் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அவர் ஃபிட் இல்லை என்றால், சில விவகாரங்கள் இருந்தால் அவர் அதை உடனடியாக தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அவர் இப்படியே வீசினால் வெறும் மீடியம் ஃபேஸ் பவுலராக குறுகி விடுவார். 145-150 கி.மீ வேகத்தில் பந்துகளை ஸ்விங் செய்வார் ஷாஹின். ஆனால் இப்போது கொஞ்சம் ஸ்விங் மட்டுமே உள்ளது வேகத்தைக் காணோம். இப்படி வீசினால் அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்காது.

முதல் போட்டியைப் பார்த்த போது வலி நிறைந்ததாக இருந்தது. முதலில் ஆஸ்திரேலியா வருகிறோம் என்றால் பீல்டிங்கை முழுதும் கரைகாண வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு கேட்ச்களை விடுதல், பவுண்டரிகளை விடுதல் போன்ற வாய்ப்புகளை வழங்கினால் அவர்கள் எதிரணியை ஏறி மிதித்து விடுவார்கள். பெர்த் டெஸ்ட்டில் அதுதான் நடந்தது” என்கிறார் வக்கார் யூனிஸ்.

வேகம் குறைவதற்குக் காரணம் தனியார் டி20 கிரிக்கெட்தான். ஏனெனில் 4 ஓவர்கள் வீசினால் போதும் ரன் கட்டுப்படுத்தும் டெக்னிக் இருந்தால் போதும், பிறகு ஒரு சீசன் முழுதும் ஆட வேண்டும் அப்போது தான் பணம் சம்பாதிக்க முடியும், காயமடைந்து விட்டால் உடல் உபாதைக்குச் செலவழிப்பதோடு பணம் சம்பாதிக்கவும் முடியாது, ஆகவே காயமடைந்து விடக்கூடாது என்பதில் பவுலர்கள் இப்போதெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டில் ஏனோதானோ என்று வீசிவிட்டுச் செல்கின்றனர். இது மிகப்பெரிய கவலையளிக்கக் கூடியதாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x