Last Updated : 14 Jan, 2018 04:09 PM

 

Published : 14 Jan 2018 04:09 PM
Last Updated : 14 Jan 2018 04:09 PM

கோலி உட்பட கேட்ச்களை விட்ட இந்திய அணி : தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள்!

செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு சற்று முன் தென் ஆப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்சில் 335 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அஸ்வின் 38.5 ஓவர்கள் 10 மெய்டன்களுடன் 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணியினர் தவறவிட்ட கேட்ச்களுடன் தென் ஆப்பிரிக்கா 66 ரன்களைச் சேர்த்தது. ஆனாலும் தன் கடைசி 7 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா 89 ரன்களுக்கு இழந்தது, இந்தியா தன் முதல் 7 விக்கெட்டுகளை இதே 89 ரன்களுக்கு இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். ஏனெனில் ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்ச் இன்னும் வேகம் கூடும் பிட்ச், எனவே 350 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றார், இந்தப் பிட்சில் நம் பவுலிங்கை வைத்து எதுவும் கூற முடியாது, அவர்கள் வீசத் தொடங்கிய பிறகுதான் தெரியும். இந்திய பேட்ஸ்மென்க்ள் அனாவசியமாக குகைக்குள் செல்லாமல் தைரியமாக ஆட வேண்டும். பிலாண்டரை ரெண்டு வாங்கு வாங்கினால் கொஞ்சம் ஆடிப்போவார்கள்.

பார்த்திவ் படேல், பாண்டியா, விராட் கோலி விட்ட கேட்ச்கள்:

சஹா போன போட்டியில் 10 கேட்ச்களை பிடித்து சாதனை புரிந்தார், ஆனால் கோலியின் அராஜகத்தினால் அவரும் புவனேஷ்வர் குமார் போல் உட்கார வைக்கப்பட்ட நிலையில் ஆம்லாவுக்கு இடது புறம், அதுவும் படேலுக்கு வாகான இடது புறம் வந்த கேட்சை அவர் தவற விட்டார் நேற்று, ஆம்லா 82 ரன்கள் எடுத்தார். இன்று டுபிளெசிஸுக்கு அஸ்வின் பந்தில் எட்ஜ் ஆக கேட்சை விட்டார் பார்த்த்திவ் படேல்.

ரபாடாவுக்கு அஸ்வின் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கேட்ச்கள் தவற விடப்பட்டது, ஒன்று மோசமான ஸ்லிப் பீல்டரான கோலியால் விடப்பட்டது, அஸ்வின் பந்து ஒன்று திரும்பி எட்ஜ் எடுக்க ஸ்லிப்பில் தவறாக, வைடாக நின்று கொண்டிருந்த கோலியின் வலது புறம் வந்த கேட்சை நழுவ விட்டார். அடுத்த பந்தே ரபாடா மீண்டும் ஆஃப் திசையில் ஷாட் ஆட சற்று தள்ளி பாண்டியா கேட்ச் எடுக்கப் போக இன்னொரு வீரர் வர அவர் கேட்சைக் கோட்டை விட்டார். இந்த இரண்டு கேட்ச்களூம் விடும்போது தென் ஆப்பிரிக்கா 292/7 என்று இருந்தது. மீண்டும் கோட்டை விட்ட கேட்ச்களினால் 35-40 ரன்களைக் கூடுதலாக விட்டுக் கொடுத்தது இந்திய அணி. விராட் தனக்கு வந்த கேட்சை விட்டுவிட்டு அடுத்த பந்தில் கேட்ச் விட்ட பீல்டரை திட்டுகிறார்! என்ன சொல்ல?

இன்று காலை மஹராஜ் 18 ரன்களில் ஆஃப் ஸ்டம்புக்கு நெருக்கமான பந்து ஒன்று எழும்ப மஹராஜ் மட்டையில் பட்டு பார்த்திவ் படேலிடம் கேட்ச் ஆனது. இந்தப் போட்டியில் ஷமி வீசிய சிறந்த ஓவர் இதுதான். ரபாடாவுக்கும், டுபிளெசிசுக்கும் 42 ரன்கள் கூட்டணி அளித்தனர் இந்திய பீல்டர்கள். ரபாடா 11 ரன்கள் எடுத்து இஷாந்த் ஷர்மாவின் பவுன்சரி ஹூக் செய்ய அது டீப் ஸ்கொயர் லெக்கில் இறங்க முன்னால் ஓடி வந்த் கடினமான கேட்சைப் பிடித்தார் பாண்டியா. டுபிளெசிஸ் மிக அருமையான பொறுமையான இன்னிங்சை ஆடி 9 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மாவின் சாதாரண இன்ஸ்விங்கர் பந்தை லெக் திசையில் ஆக்ரோஷமாக பிளிக் செய்ய முயன்று மிடில் ஸ்டம்ப்பை இழந்தார். மோர்னி மோர்கெல் ஆச்சரியகரமான ஒரு ஆன் திசை பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வீப்பர் கவரில் விஜய்யிடம் கேட்ச் கொடுத்து அஸ்வினின் 4வது விக்கெட்டானார். தென் ஆப்பிரிக்கா 335 ரன்களுக்குச் சுருண்டது.

இந்திய அணி ஒரு ஓவரை ஆடியது, அதில் மஹராஜ் வீச முரளி விஜய் முதல் புல்டாஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார், கடைசி பந்தில் மட்டையின் உள்விளிம்பில் வாங்கி கேட்சுக்கு நெருக்கமாகச் சென்றது தப்பினார். இந்தியா 4/0

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x